நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சந்தேக நபர் அய்யப்பன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய யார்டில் நாகர்கோவில் - கோட்டயம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிக்காக கடந்த 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் இருக்கையின் அடியில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பிரேத பரிசோதனையில் அந்த பெண் சரமாரியாக தாக்கப்பட்டும், பாலியல் வன்கொடுமை செய்து் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரெயில்வே போலீசாரும் இந்த வழக்கில் தீவிரம் காட்டினர்.
அவர்கள் நாகர்கோவில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் திரிந்த ஒரு நபரின் உருவம் பதிவாகியிருந்தது. அவர் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது31) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது பெண்ணை கொலை செய்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.
அவர் அந்த பெண்ணைமிகவும் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்து உள்ளது. அய்யப்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டை விட்டு வெளியேறி பொது இடங்களில் தங்கி வந்த அவர், ரெயில் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரிந்தார்.
கடந்த 14-ந்தேதி இரவு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் அய்யப்பன் திரிந்துள்ளார். அப்போது அங்கு டீ-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்தபடி பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அய்யப்பனுக்கு அந்த பெண்ணின் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. அவரது கையை பிடித்து இழுத்து அத்துமீற முயன்றுள்ளார்.
அந்த பெண் கூச்சல் போடவே, அய்யப்பன் அவரை தாக்கியுள்ளார். தாக்குதலில் நிலைகுலைந்து போன அந்த பெண்ணை, யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரெயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த பெண் சுதாரித்துக்கொண்டு எழுவதற்கு முயற்சி செய்த போதெல்லாம், அய்யப்பன் அவரை தாக்கி நிலைகுலைய செய்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அய்யப்பன் கொடூரமான முறையில் தாக்கியதால் அந்த பெண் இறந்துவிட்டார். அந்த பெண்ணின் உடலை ரெயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் தள்ளி வைத்து இரவில் அந்த ரெயில் பெட்டியிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலையில் எந்த ஒரு பதற்றமும் இன்றி வெளியே சென்றுள்ளார்.
அவர் பெண்ணை கொன்றபோது அணிந்திருந்த ஆடைகளை கழற்றி புதரில் வீசிவிட்டு, மற்றொரு ஆடையை அணிந்து கொண்டுள்ளார். இந்த தகவல்கள் அய்யப்பனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அய்யப்பனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.