தமிழக செய்திகள்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு- வாலிபர் கைது| Vilathikulam

கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

Lavanya

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, மாணவி கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், விசாரணையை முறையாக நடத்தவும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த கொலை வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தை சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இம்மனு மீதான விசாரணையின் போது, மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அரசு தகவல் தெரிவித்தது.

இதனிடையே, குற்றவாளியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து மாணவியின் உறவினர்கள் ஒருவாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவி பாலியல் கொலை வழக்கில் முனீஸ்வரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சாயல்குடியைச்சேர்ந்த 30 வயதான முனீஸ்வரன் கைதாகி உள்ளான்.

கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும், குற்றவாளி யார்? குற்றம் நடந்தது எப்படி? என்ற விவரத்தை போலீசார் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.