பெண்களின் வண்டி மட்டும் அவர்களை போலவே அங்கும் இங்குமாக தள்ளாடியபடி வந்தது. அப்போது ஒரு வாகனத்தின் மீது அந்த பெண்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விட்டது.
ஏய்... வண்டியை நிறுத்து... என்று இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் நின்று ஆக்ரோஷமாக சத்தம் போட்டதை கேட்டதும் மற்றொரு பக்கம் வழியாக சென்று விடலாம் என்று வண்டியை ஒருவர் திருப்பினார். உடனே அந்த வண்டியின் முன்பு போய் நின்றபடி போயிருவியா நீ... என்று அவரையும் மிரட்டினார் அந்த பெண்மணி.
சுடிதாரில் காட்சி அளித்த 2 இளம்பெண்கள் புழல் ஜி.என்.டி. ரோட்டில் மாலை நேரத்தில் நடத்திய ‘அட்ராசிட்டி’ காட்சிகள்தான் இது.
‘தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி..
என் கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி’
என்ற கதையில் அந்த 2 பெண்களும் மதுவை ஊற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹாயாக வந்து கொண்டு இருந்தார்கள். அவர்களோடு வாலிபர் ஒருவரும் கம்பெனிக்காக உடன் வந்தார். மப்பு ஏறிய நிலையில் வண்டி எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்? என்று எதுவும் தெரியாமல் வண்டி வந்துக் கொண்டு இருந்தது.
புழல் சந்திப்பில் வாகனங்கள் அந்த மாலை வேளையில் நெரிசலில் வரிசைக்கட்டி நின்றன. ஆனால் அந்த பெண்களின் வண்டி மட்டும் அவர்களை போலவே அங்கும் இங்குமாக தள்ளாடியபடி வந்தது. அப்போது ஒரு வாகனத்தின் மீது அந்த பெண்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விட்டது. அவ்வளவுதான்... வண்டியைவிட்டு ஆவேசமாக கீழே இறங்கிய ஒரு பெண் தலைமுடியை வாரி சுருட்டி கட்டியபடி கோதாவில் இறங்கினார். ‘ஏய்... என் வண்டியையே இடிச்சிட்டியா?’ யார்டா நீ... என்று ஆவேசமாக கத்தினார்.
அதைக்கேட்டதும் எம்மா... இடிச்சது நீ... பழி என் மீதா? என்பது போல் அந்த வாகன ஓட்டி பரிதாபமாக ஆளைவிட்டால் போதும் என்று வாகனத்தை நகர்த்த தொடங்கினார். ஆனால் ஆவேசத்தில் இருந்த அந்த பெண்கள் நடுரோட்டில் இறங்கி நின்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து பேட்டை ரவுடிகளை போல் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசி ஆட்டம் போட்டனர்.
அப்போது ஒரு லாரி நெருங்கி வந்தது. அதை பார்த்ததும் ஏய் இடிச்சுடுவியா நீ... இடிச்சுட்டு போ பார்க்கலாம் என்றார். இந்த களேபரத்தால் ரோட்டில் வாகனங்கள் எதுவும் நகர முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அதை பார்த்த பொதுமக்கள் சிலர் அந்த பெண்களை சமாதானப்படுத்த வந்தனர். கிட்டே வந்த போதுதான் அவர்கள் மப்பில் இருப்பது அவர்களுக்கே தெரிந்தது.
ஒருவர் வண்டியை ஓரங்கட்டுங்கள் என்றார். அதைக் கேட்டதும் ‘என்னய்யா சொல்ற... என் வண்டியை ஓரங்கட்ட சொல்றியா? எங்க ஊராக இருந்தால் சீனே வேற...’ என்றார். உடனே அங்கிருந்த ஆண்கள் சிலர் உங்களுக்கு எந்த ஊரும்மா? என்றதும் என் ஊரு துபாய் தெரியுமா? என்றனர். பார்த்தாலே தெரியுது என்றபடி அங்கிருந்த ஆண்களில் ஒருவர் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறை விட்டார். அருகில் நின்ற போக்குவரத்து போலீஸ்காரரும் நிலைமை எல்லை மீறி செல்கிறதே என்று தவித்தபடி அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அந்த பெண்கள் சமாதானம் ஆகவில்லை. என்னய்யா போலீஸ் நீ... (அதற்கு பிறகு பேசிய வார்த்தைகள் அச்சில் சேர்க்க முடியாதவை).
அடங்காமல் நடுரோட்டில் ஆடிக் கொண்டு இருந்த அந்த பெண்களை எப்படி அடக்கி அங்கிருந்து அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் தவித்த போலீஸ்காரர் ஒருவழியாக மற்ற போலீஸ்காரர்களையும் வரவழைத்து 2 பெண்கள் மற்றும் அவருடன் வந்திருந்த இன்னொரு வாலிபரையும் சேர்த்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் யாரும் தன்னிலையில் இல்லை என்பதை போலீசார் உணர்ந்து கொண்டனர். அவர்களை விசாரித்த போது ஒரு பெண்ணுக்கு 17 வயது சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் என்பதும், இன்னொருவருக்கு வயது 18 அயப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அனைவரும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததால் போதை தெளிந்த பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று மகளிர் போலீஸ் பாதுகாப்பில் வைத்து இருந்தனர்.
இந்த சம்பவம் புழல் பகுதியில் சிறிது நேரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை கேமராவுக்குள் அடக்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் இணைய தளங்களில் வைரலாக பரவ விட்டனர்.