ஜோதிடர் மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பாலியல் வன்கொடுமை புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை சரக போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு எனது பெற்றோர் நீண்டகாலமாக திருமண வரன் பார்த்து வந்தனர். திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு கோவில்களில் பரிகாரங்கள் செய்தல், ஜோதிடர்களை அணுகி ஜாதகம் பார்ப்பது போன்ற செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். எனக்கு திருமண வரன் கிடைக்காததாலும், எனது பெற்றோர் படும் துயரத்தினாலும் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் மூலம் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு சில பரிகாரங்களை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என கூறினார். பரிகாரம் என்ற பெயரில் பல முறை என்னை நேரில் அழைத்து சந்தித்தார்.
பின்னர் அவரே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். என்னை கட்டாயப்படுத்தி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன்பின் கடன் பிரச்சனை இருப்பதாக கூறி நான் திருமணத்துக்கு சேமித்து வைத்த பணத்தை பறித்தார். ஒருமுறை தனது உறவினர் விபத்தில் சிக்கி விட்டதாக கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றார். பணத்தை அபகரித்துக் கொண்ட பின் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தினார்.
நான் விசாரித்தபோது ஜோதிடர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை சந்தித்து என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்களே என அழுதேன். அதற்கு அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து விரட்டி விட்டார். உயர் போலீஸ் அதிகாரி என்னுடைய வாடிக்கையாளராக உள்ளார். அவரிடம் கூறி உன்னை தொலைத்து விடுவேன் என மிரட்டினார்.
ஜோதிட நம்பிக்கையையும், திருமண ஆசையையும் பயன்படுத்தி என்னை நம்பவைத்து எனது வாழ்க்கையை சீரழித்து எனது வாழ்க்கையை நாசம் செய்து கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.
இந்த புகார் மனுவை அந்த பெண் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர், கோவை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அனுப்பி உள்ளார். ஜோதிடர் மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பாலியல் வன்கொடுமை புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.