தமிழக செய்திகள்

திருமணம் முடிந்து 5 மாதங்களில் இளம்பெண் டாக்டர் தற்கொலை

நீண்ட நேரமாக லாவண்யா தங்கியிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவரது தோழிகள் மற்றும் சக மாணவிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 24). எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ள இவர் அதே மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்று வேட்கையுடன் பள்ளிப்படிப்பை முடித்த அவருக்கு எதிர்பார்த்தது போலவே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திருமணம்

தான் படிக்கும் மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதுகலை படிப்பை மதுரையில் தொடர்ந்து படித்து வந்தார். இதற்காக அவர் அதே கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான கோவைக்கு சென்று வருவது வழக்கம். இதற்கிடையே திருமண வயதை எட்டிய மகளுக்கு அவரது பெற்றோர் மணம் முடித்து வைக்க எண்ணி மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் டாக்டரான லாவண்யா, தான் முதுகலை படிப்பையும் படித்து முடித்த பிறகே திருமணம் குறித்து பேசவேண்டும் என்று தொடர்ந்து பெற்றோரிடம் கூறிவந்தார். அனால் அவர்களே திருமணம் முடித்து வைப்பதில் உறுதியாக இருந்தனர்.

இதையடுத்து லாவண்யாவுக்கு திவாகரன் என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து வைத்தனர். கோவையில் நடந்த பிரமாண்ட திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் அவருடன் படித்து வரும் சக மாணவிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது அவரிடம் திருமணமே வேண்டாம் என்று கூறிவந்த நீ எப்படி சம்மதம் தெரிவித்தாய் என்று சக மாணவிகள் கேட்டுள்ளனர்.

கருத்து வேறுபாடு

அதற்கு பதில் அளிக்க முடியாமல் தவித்த லாவண்யாவுக்கு, திருமணம் செய்து கொண்டதால் தனது முதுகலை மருத்துவப்படிப்புக்கு இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. மேலும் மாணவி என்ற வாழ்க்கை முறையில் இருந்து தாம்பத்தியம் என்ற முறைக்கு மாறிவிட்டதால் மருத்துவ படிப்பில் கவனம் சிதறிவிடும் என்றும் அவர் கருதினார்.

இதுபற்றி முதலில் தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவர்கள் தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம், தைரியமாக படி என்று தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மனக்குழப்பத்தில் இருந்த டாக்டர் லாவண்யா, தனது கணவரிடம் தன்னுடைய நிலை குறித்து பேசினார். இதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே உறவினர்கள் இல்ல நிகழ்ச்சி, விருந்து நிகழ்ச்சிகள் என்று சென்றுவந்த லாவண்யாவுக்கு படிப்பில் கவனம் சிதறியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான கோவைக்கு சென்றுவிட்டு, 13-ந்தேதி மீண்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பிய லாவண்யா யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற அவர் மீண்டும் வெளியே வரவில்லை.

இதற்கிடையே நீண்ட நேரமாக லாவண்யா தங்கியிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவரது தோழிகள் மற்றும் சக மாணவிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. அத்துடன் உள்ளேயிருந்து எந்த பதிலோ, சத்தமோ வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்தவர்கள் உடனடியாக விடுதி காவலாளிக்கு தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சனை

அவரது உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு டாக்டர் லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த தல்லாகுளம் போலீசார், லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் துயர முடிவை அறிந்து ஓடோடி வந்த அவரது பெற்றோர் உடலை பார்த்து கதறித்துடித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் டாக்டர் லாவண்யாவின் தற்கொலை முடிவுக்கு குடும்ப பிரச்சினையே காரணம் என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக மருத்துவம் படிக்க திருமண வாழ்க்கை தடையாக இருக்கும் என்று கருதிய லாவண்யா இந்த துயர முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இதுதவிர வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.