தமிழக செய்திகள்

பழனி கோவில் படிப்பாதையில் மனைவியை தூக்கிச் சென்று ரீல்ஸ் எடுத்த வாலிபர்

கணவன், மனைவி இடையே உள்ள உண்மையான அன்பையும், புரிதலையும் வெளிப்படுத்த பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பக்தர்கள் வழிபடும் இடங்களில் இது போன்ற ரீல்ஸ் எடுக்க கூடாது என தமிழகத்தில் கட்டுப்பாடு உள்ளது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல வின்ஞ்ச் மற்றும் ரோப்கார் வசதிகள் இருந்தபோதிலும் வேண்டுதலை நிறைவேற்றவும், புண்ணியம் தேடவும் படிப்பாதை வழியாக பெரும்பாலான பக்தர்கள் மலையேறிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் பழனி கோவிலுக்கு வந்த இளம் தம்பதியர் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது மனைவியை படிப்பாதையில் கையில் தூக்கியபடி கணவர் மேலே வருகிறார். அப்போது “கையில் மிதக்கும் கனவா நீ” என்ற சினிமா பாடல் பின்னணியில் ஒலிக்க அதனை மற்ற பக்தர்கள் பார்த்தபோதும் அதனை கண்டு கொள்ளாமல் தூக்கியபடி செல்கிறார்.

பின்னர் மனைவியை இறக்கி விட்டு அரோகரா என்ற கோஷத்துடன் மலைக் கோவிலுக்கு செல்வது போல அந்த காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. கணவன், மனைவி இடையே உள்ள உண்மையான அன்பையும், புரிதலையும் வெளிப்படுத்த பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பக்தர்கள் வழிபடும் இடங்களில் இது போன்ற ரீல்ஸ் எடுக்க கூடாது என தமிழகத்தில் கட்டுப்பாடு உள்ளது. ஏற்கனவே திருச்செந்தூர் முருகன் கோவிலில் இது போன்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி ஒரு சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது மற்ற பக்தர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுகன்யா என்ற பெயரில் இன்ஸ்டா பக்கத்தில் பதிவான இந்த வீடியோவை எடுத்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.