சிறை தண்டனை 
தமிழக செய்திகள்

போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு- 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 21 ஆண்டு சிறை

வழக்கை விசாரித்த போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தீர்ப்பு வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த மருதுலிங்கம் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றம் 21 ஆண்டு சிறை மற்றும் ரூ.7,000 அபராதம் விதித்துள்ளது. சமூக நல அலுவலர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது ஆய்வாளர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே முதியனூரை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்த விவகாரத்தில், கள்ளிக்குடி சமூக நல அலுவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், மொச்சிகுளம் பகுதியை சேர்ந்த மருதுலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் புலனாய்வு பணிகளை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா மற்றும் நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மிச்சம்மாள் ஆகியோர் மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தீர்ப்பு

இந்த வழக்கை நேற்று விசாரித்த போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கோ அல்லது 1098 என்ற உதவி மையத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் மதுரை மாவட்ட காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT