தமிழக செய்திகள்

பானிபூரி இல்லை என்று கூறியதால் வடமாநில வாலிபர் மீது தாக்குதல்

வடமாநில வாலிபரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமாநில வாலிபர், பானிபூரி இல்லை என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை வாலிபர்கள் அந்த வடமாநில வாலிபரை சரமாரியாக தாக்கினர்.

பழவேற்காடு பஜாரில் வடமாநில வாலிபர் தள்ளு வண்டியில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு இந்த கடைக்கு மதுபோதையில் வந்த 2 வாலிபர்கள் பானிபூரி கேட்டனர்.

அப்போது, வடமாநில வாலிபர், பானிபூரி இல்லை என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை வாலிபர்கள் அந்த வடமாநில வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்களை கண்டித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த போதை நபர்கள் பொதுமக்களையும் கல்லால் தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களும் அங்கிருந்த பொதுமக்களை மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த வடமாநில வாலிபருக்கு பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, பழவேற்காட்டில் அடிக்கடி போதை வாலிபர்கள் ரகளையில் ஈடுபடுகிறார்கள். தட்டிக்கேட்கும் பொது மக்களையும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வடமாநில வாலிபரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT