விசாரணையில் முத்துப்பாண்டி புதிய கார் ேஷாரூம் ஒன்றில் டீலராக பணியாற்றி வருவதும், புதிதாக கார் வாங்கிய நபருக்கு வி.ஐ.பி. பதிவெண் பெற்று தருவதாகவும் அதற்காக ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகும் என்று கூறி அந்த கார் உரிமையாளரிடம் முத்துப்பாண்டி பெற்றுக்கொண்டது தெரியவந்தது.
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பதிவு, புதுப்பித்தல் பணிகளுக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து வருபவர் அருண்காந்தி. சம்பவத்தன்று இவர் அலுவலக பணியில் இருந்தபோது, புதிய மோட்டார் வாகன பதிவு மற்றும் முன்பதிவு எண் பெறுவதற்காக வரி மற்றும் கட்டணம் செலுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது TN76BU0001 என்ற அதிநவீன முன்பதிவெண்ணிற்கு, சென்னை அரசு உதவிச்செயலாளரால் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும் ஆணையினை சமர்ப்பித்து புளியரை மடத்தறை பாறையை சேர்ந்த லாராபேசன்ஸ் என்பவரின் பெயரில் ஒருமுறை கடவுச்சொல் பெறப்பட்டு, ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதே முன்பதிவெண்ணிற்கு கடையம் ஏ.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அரசு முறையாக ஒதுக்கீடு செய்த மற்றொரு ஆணையினை சமர்ப்பித்து மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர்தான், முந்தைய லாராபேசன்ஸ் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட முன்பதிவெண் ஒதுக்கீட்டு ஆணை போலி என்பது அலுவலக விசாரணையில் அம்பலமானது. அரசுத்துறையின் பெயரிலும், உயர் அதிகாரிகளின் பெயரிலும் போலியான ஆவணங்களை தயாரித்து முறைகேட்டில் ஈடுபட மர்ம நபர் முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவன் கவனத்துக்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் உத்தரவுப்படி தென்காசி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போலியான ஆணை தயாரித்து பதிவெண் பெற முயன்ற நபர் நெல்லையை அடுத்த பொன்னாகுடி தெற்கு தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் முத்துப்பாண்டி(வயது 32) என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் முத்துப்பாண்டி புதிய கார் ேஷாரூம் ஒன்றில் டீலராக பணியாற்றி வருவதும், புதிதாக கார் வாங்கிய நபருக்கு வி.ஐ.பி. பதிவெண் பெற்று தருவதாகவும் அதற்காக ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகும் என்று கூறி அந்த கார் உரிமையாளரிடம் முத்துப்பாண்டி பெற்றுக்கொண்டது தெரியவந்தது.
அதன்பின்னர் அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு போலி ஆணை தயாரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோசடி செய்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.