தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி.யுமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தது போது கூறியதாவது:-
நான் இப்போதும் சொல்கிறேன், இந்த ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, ஒரு முதலமைச்சருக்குத் தர வேண்டிய மரியாதையை எங்களுடைய தலைவரும் நாங்களும் தரத் தயார். ஆனால் எங்களுடைய நிலைப்பாடு உணர்ச்சிவசப்பட்டவர்கள் இந்த ஆட்சியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அதே வழியில் முதலமைச்சரும் செல்லக் கூடாது என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொன்றுக்கும் அரசியல் புரிதல் இல்லாமல் கவர்ச்சி அரசியல் என்கிறார்கள். வாதத்திற்கு வைத்துக்கொள்வோம், ஏன் சினிமா நடிகருக்குக் கவர்ச்சி அரசியல் இருக்கக் கூடாது? "அந்தக் கவர்ச்சி அரசியலில் இருந்து வெளியே வாருங்கள்" என்று தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்வதற்கு மற்ற கட்சிகளுக்கு எல்லாம் உரிமை இல்லையா? அது என்ன "கவர்ச்சி அரசியல்" என்று வார்த்தையைப் பயன்படுத்தினால் எனக்கு நன்றாக வந்துவிடும்... என்ன வார்த்தை வந்துவிடும்? இது முதலமைச்சருக்கு அழகா?
"You are occupying the constitutional chair, brother / bro Vijay" என்று நாங்களும் கேட்போம்.
ஒரு முதலமைச்சராகப் போகிறீர்கள், நன்றி சொல்கிறீர்கள். திமுக-வை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, விமர்சியுங்கள். அதற்கு ஒரு ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள். மீதி 10 நிமிடங்கள், "பிரதமரோடு போனேன், சந்தித்தேன், என்ன செய்யப் போகிறேன், பிரதமரிடம் மனு அளித்திருக்கிறேன்" என்று ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா?
நான் கேட்கிறேன், யாரைப் பார்த்து நீங்கள் குறை சொல்கிறீர்கள்? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நீங்கள் போய் கடிதம் கொடுக்கிறீர்கள்.
நீங்கள் சொன்ன "Stalin சார்" யார் தெரியுமா? அரசியல் சட்டத்தால் திருத்தப்பட்ட EWS (Economically Weaker Sections) constitutional mandate, once it was passed by the Parliament, அதைத் தமிழ்நாட்டுக்குள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் ஸ்டாலின்!
நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் போட்டிருப்பது என்ன தெரியுமா? வெறும் அரசாணை (G.O.) சார். அரசியல் சட்டத்தை மீறினால் ஆட்சியையே கலைக்கலாம். நாங்கள் மீறியிருக்கிறோம், தாழ்த்தப்பட்டவர்களுக்காக, பிற்படுத்தப்பட்டவர்களுக்காக!
நீங்கள் ஒரு தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் போய் கெஞ்சுகிறீர்களே, கூத்தாடுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்கள் அம்பலப்படுத்தக் கூடாதா?
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் முதலமைச்சர் அவர்களே, "நாங்கள் உங்களுடைய governance-ஐத் தான் ஆறு மாதம் கழித்து விமர்சிப்போம்" என்று சொன்னோம். "உங்களுடைய இயலாமையை, day-to-day administration-இல் இருக்கிற குறைபாடுகளை நாங்கள் விமர்சிக்க மாட்டோம்" என்று நீங்களும் சொல்ல முடியாது, நாங்களும் கேட்க முடியாது.
நாங்கள் day-to-day administration-ஐச் சொன்னால்... இவ்வளவு கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது, இவ்வளவு பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன என்று சொன்னால், நீங்கள் உடனே முந்தைய அரசை விமர்சிக்கிறீர்களா? நீங்கள் சொன்னீர்களே, "நான் வந்த உடனே எல்லாம் சரியாகிவிடும்" என்று.
சரி, பணம் இல்லை, நிதிநிலைமையைச் சீர் செய்வதற்கு ஆறு மாதம் ஆகலாம் அல்லது இரண்டு வருடம் ஆகலாம். சட்டம் ஒழுங்குக்கு என்ன பிரச்சனை? போலீஸ் உங்களிடம் தானே இருக்கிறது? துப்பாக்கி உங்கள் கையில் தானே இருக்கிறது? Transferring authority நீங்கதானே? அதற்கு என்ன கால அவகாசம் வேண்டும் என்று கேட்கிறேன்? உளவுத்துறையைச் சரியாக வைத்திருக்க வேண்டியதுதானே நீங்கள்?
இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.