தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கரிசல் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் வலிகளையும் தனது படைப்புகளின் மூலம் உலகறியச் செய்த அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பூமணி, சென்னையில் காலமானார். அவரது உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.
கரிசன் மண் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை யதார்த்தமாக பதிவு செய்தவர். பிறகு, வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் அஞ்ஞாடி உள்ளிட்ட அவரது நாவல்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றன. அஞ்ஞாடி நாவலுக்காக 2014-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
பூமணி எழுதிய புகழ்பெற்ற 'வெக்கை' நாவலைத் தழுவி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம் தேசிய அளவில் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.