ஓசோன் படலம் என்பது பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு இயற்கை வாயு பாதுகாப்பு கவசம் ஆகும். இது சூரியனில் இருந்து வரும் ஆபத்தான புற ஊதா கதிர்களை உறிஞ்சி, பூமியில் உள்ள மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கிறது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள வளிமண்டல அடுக்கில் அமைந்துள்ளது. ஓசோன் என்பது 3 ஆக்ஸிஜன் அணுக்களால் ஆன ஒரு மூலக்கூறு ஆகும்.
சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் சுமார் 97 முதல் 99 சதவீதம் வரை இது உறிஞ்சிக் கொள்கிறது.
இந்த ஓசோன் அடுக்கு 1913-ம் ஆண்டு பிரஞ்சு இயற்பியல் வல்லுநர்களான சார்லசு பாப்ரி மற்றும் ஹென்றி புய்சன் ஆகியோரால் கண்டறியப்பட்டது.
மனிதர்களின் செயல்பாடுகளால் உருவாகும் குளோரோபுளோரோ கார்பன்கள் மற்றும் பிற ரசாயனங்கள் வளிமண்டலத்தில் சேர்ந்து ஓசோன் அடுக்கை மெலிதாக்குகின்றன. இதனால் புற ஊதா கதிர்கள் பூமியை அடைந்து தோல் புற்றுநோய், கண்புரை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதேபோல வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றின் வேதிவினையால் தரைப் பரப்புக்கு அருகில் அதிகரிக்கும் ஓசோன் மூலக்கூறுகள், காற்று மாசுபாட்டை குறிக்கிறது.
அந்த வகையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மே 19-ந்தேதி சென்னை மணலி பகுதியில் ஒரு கன மீட்டர் காற்றில் 500 மைக்ரோகிராம் என்ற அளவில் ஓசோன் மூலக்கூறுகள் பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு நாட்டிலேயே பதிவான மிக உயர்ந்த காற்றுமாசு அளவாகும்.
மற்றொரு காற்றுத் தர கண்காணிப்பு நிலையத்தின் பதிவுகளிலும், கடந்த மே 3-ந்தேதி மணலி பகுதியில் காற்றில் 361 மைக்ரோகிராம் அளவில் ஓசோன் மூலக்கூறுகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் வடசென்னையில் உள்ள தொழிற்பேட்டை பகுதி, நாட்டின் மிக மோசமான ஓசோன் மாசுபாடு மையங்களில் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது.
மணலி பகுதியில் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உரத் தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த மே மாதத்தில் மட்டும் 24 நாட்களில் மணலியில் ஓசோன் அளவு தேசிய காற்றுத் தர அளவுகோலை மீறியுள்ளது. 8 மணி நேர சராசரி அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்டு உள்ள கனமீட்டரில் 100 மைக்ரோகிராம் என்ற தேசிய தரநிலையை இந்த அளவுகள் தாண்டியுள்ளன என்றார்.
இருப்பினும், இந்த மாசுபாட்டு அளவுகளுக்கு தொழிற்சாலைகள் மட்டுமே காரணம் என்று கூற முடியாது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும், ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழிற்பேட்டைகள் மற்றும் வாகன போக்குவரத்து இணைந்து இந்த பாதிப்பை அதிகரிக்கின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் மணலியின் காற்றுத் தரக் குறியீடு 2018-ம் ஆண்டில் 118 ஆக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டில் 64 ஆகக் குறைந்துள்ளது.
அதிக மாசு ஏற்படுத்தும் 17 தொழிற்சாலைகளில், 15 தொழிற்சாலைகள் தற்போது எரிபொருள் எண்ணெய்க்கு பதிலாக சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.பி.ஜி. மற்றும் நாப்தா போன்ற தூய்மையான எரிபொருட்களுக்கு மாறியுள்ளன என்கின்றனர்.