தமிழக செய்திகள்

World Water Day | உலக தண்ணீர் தினம்: சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

மழைநீர் சேகரிப்பு இன்றைய காலத்தின் மிக முக்கியமான தேவையாக உள்ளது.

மாலை மலர்

சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு "வான் அமிர்தம்" என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் வருகின்ற 22.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (18/03/2026) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (தென் கிழக்கு கடலோர மண்டலம்) இயக்குனர் முனைவர் M. சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் தமிழ்மாறன் பேசுகையில், “மழைநீர் சேகரிப்பு என்பது இன்றைய காலத்தின் மிக முக்கியமான தேவையாக உள்ளது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீரை எவ்வாறு முறையாகச் சேமிப்பது என்பது குறித்த விரிவான பயிற்சிகளையும், செயல்முறை விளக்கங்களையும் இந்த கருத்தரங்கில் வழங்க இருக்கின்றோம்.

குடிநீர் தரம் மற்றும் உடல்நலம்:

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் படி நாம் பருகும் குடிநீரின் மொத்த உப்புகளின் அளவு (TDS) 300-க்குள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலவும் மாசு காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக ஆற்றங்கரைகளில் எடுக்கப்படும் போர் தண்ணீரில் கூட இந்த அளவு 750 முதல் 800 வரை உள்ளது.

இவ்வளவு அதிகப்படியான உப்புகள் மற்றும் ஃபுளோரைடு கலந்த நீரைத் தொடர்ந்து அருந்துவது, சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலகிலேயே மிகச்சிறந்த மற்றும் சுத்தமான நீர் மழைநீர் தான் என்று WHO சான்றளிக்கிறது. முதல் மழையைத் தவிர்த்துவிட்டு, இரண்டாவது மழையிலிருந்து வரும் நீரைச் சேமித்து, வடிகட்டிக் குடிப்பதன் மூலம் இத்தகைய உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

எளிமையான சேமிப்பு முறைகள்:

ஒரு குடும்பத்திற்கு சராசரியாக வருடத்திற்குத் சுமார் 3,500 லிட்டர் குடிநீர் தேவைப்படலாம். இதனை வீட்டின் மொட்டை மாடியில் விழும் மழைநீரைக் கொண்டே பூர்த்தி செய்ய முடியும். இதற்கு ஒரு சிறிய சேமிப்புத் தொட்டியும், முறையான வடிகட்டியும் இருந்தால் போதுமானது.

அதேபோல், விவசாய நிலங்களில் போர் தண்ணீரின் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது, மேலும் நீரின் தன்மையும் மிகவும் உப்பு நிறைந்ததாக மாறி வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் பயிர்களின் வளர்ச்சி பாதிப்படைகிறது. அதனால் விவசாய நிலங்களில் முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கினால், மூன்றே ஆண்டுகளில் நிலத்தடி நீரின் மட்டம் உயரும், உப்பு நீர் நன்னீராக மாறும்.

நிபுணர்களின் வழிகாட்டுதல்:

இந்த கருத்தரங்கில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் கிழக்கு மண்டல இயக்குனர் சிவக்குமார் தமிழக நிலத்தடி நீரின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தீர்வுகள் குறித்துப் பேசுகிறார். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்ப மைய முன்னாள் இயக்குனர் முனைவர் பன்னீர்செல்வம், மற்றும் இந்நாள் விஞ்ஞானி ஆகியோர் வேளாண்மையில் நவீன நீர் மேலாண்மை முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார்.

வீடுகளில் மழைநீரை எளிமையான முறையில் சேமித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மழைநீர் சேகரிப்பு நிபுணர் சிவசுப்பிரமணியன் விளக்குகிறார். மேலும், கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் முன்னாள் விஞ்ஞானி முனைவர் சிவக்குமார், வீடுகளில் மழைநீர் சேமிப்பதற்கான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

இவர்களுடன், பெங்களூர் 'தண்ணீர் அறிவுசார் அறக்கட்டளையின்' இயக்குனர் சுஜாதா ஐயப்பா மசாகி, மானாவாரி நிலங்களிலும் மழைநீர் சேமிப்பு மூலம் ஆழ்துளைக் கிணறுகளை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்பது குறித்த அரிய தொழில்நுட்பங்களை வழங்குகிறார்.

நீர்நிலை ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள்

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பில் தன்னலமற்ற முறையில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் முக்கிய நீர்நிலை ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

விற்பனை கண்காட்சி

மேலும், கருத்தரங்கு நடைபெறும் வளாகத்தில் மழைநீர் சேகரிப்புக் கருவிகள், நவீன நீர்ப்பாசன முறைகள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களின் பிரம்மாண்டமான விற்பனை மற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு அவசியம்

இந்த மாபெரும் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 94425 90079 அல்லது 94425 90081 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டோ அல்லது https://forms.gle/Rr5wZVUjCWXqBZqi6 என்ற லிங்க் மூலமாகவோ தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்” எனக் கூறினார்.