தமிழக செய்திகள்

கட்டிடத்தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மனைவி

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு மீனாவை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 48), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அழகு மீனா (43). இவர்களுக்கு கார்த்திக்ராஜா (22), அரவிந்த் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அடித்துக்கொலை

ராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று மது குடித்து விட்டு ராஜா வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி அழகு மீனாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அழகு மீனா தனது கணவர் ராஜாவை கீழே தள்ளி அருகே கிடந்த இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத அழகு மீனா அங்கிருந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்தார். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மனைவி கைது

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு மீனாவை கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக அவர்களது 2 மகன்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT