தமிழக செய்திகள்

தென்காசியில் பயங்கரம்: தொழிலாளியை இரும்பு கரண்டியால் அடித்துக்கொன்ற நண்பர்

தொடர் விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்ப லாப்பேரி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் அய்யப்பன் என்பது தெரியவந்தது.

தென்காசி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் நேற்று நள்ளிரவில் வாலிபர் ஒருவர் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்று பார்த்தனர். அப்போது சுமார் 39 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில் கொலை செய்யப்பட்டவர் தென்காசி வாய்க்கால் பாலம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் முருகன் (வயது 39) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்ப லாப்பேரி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் அய்யப்பன்(23) என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அய்யப்பன் கடந்த 6 மாதமாக தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் வசித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட முருகனும், ராமசாமியும் கட்டிட தொழிலாளிகள். அதில் ஏற்பட்ட பழக்கத்தில் நண்பர்கள் ஆகி உள்ளனர்.

நேற்று 2 பேரும் வாய்க்கால் பாலம் பகுதியில் இருந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அய்யப்பனை வெளியூர்காரன் என கூறி தகாத வார்த்தையால் முருகன் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை எடுத்து ஆத்திரத்தில் முருகனை தாக்கியதில் படுகாயம் அடைந்து முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.