தமிழக செய்திகள்

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா அகற்றும் பணி தொடக்கம்

தொழிற்சாலையை சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது.

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் இருந்த இறால், மீன், நண்டு உள்ளிட்ட 400 டன் கடல் உணவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றின் பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்புத்துறையின் ஆய்வு அறிக்கைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட உள்ளது.

தொழிற்சாலையில் உள்ள சுமார் 1 டன் அமோனியா வாயுவை பாதுகாப்பாக டேங்கர் லாரியில் மாற்றி, சப்ளை செய்த நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பும் பணி தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் மேற்பார்வையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

அமோனியா வாயு அகற்றம்

இந்நிலையில், இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது. வாயு அகற்றும் பணிகள் நடைபெறுவதால் தொழிற்சாலையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமோனியா வாயு அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கவிதா கூறுகையில், மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். தொழிற்சாலையில் உள்ள அம்மோனியா பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.

500 மீட்டர்தடை செய்யப்பட்ட பகுதி

தொழிற்சாலையை சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை ஒட்டியுள்ள 300 மீட்டர் சுற்றளவில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஜளப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவசர உதவிக்கு

காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தேசிய பேரிடர் மீட்புப் படை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் குழு, தொழிலக பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.

கன்னிகைப்பேர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 9952590412 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.

அமோனியா வாயு கசிவு ஏற்பட்டால் பொதுமக்கள் பதற்றமடையாமல், காற்று வீசும் திசைக்கு எதிரான பகுதியில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். மூக்கு மற்றும் வாயை ஈரமான துணியால் மூடிக்கொள்ள வேண்டும். அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.