தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 234 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு முந்தைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டன.
இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் சில தொகுதிகளில் 3 மின்னணு எந்திரங்களை பயன்படுத்தக்கூடிய அளவிற்கு வேட்பாளர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடக்கூடிய தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த தொகுதிக்கு எவை என்று ஒதுக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டன.
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தப் பட்டது.
அகர வரிசையின்படி வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அச்சடிக்கப்பட்ட பேலட் பேப்பர் மூலம் பொருத்தப்பட்டது.
இந்தப் பணி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்தது. இந்த முறை வேட்பாளரின் வண்ண புகைப்படமும் வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெறுகிறது.
இந்த பணிகள் அனைத்தும் அந்தந்த வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடந்தது. சுமார் ஒரு லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் சின்னம், புகைப்படம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்தப் பணியை பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள என்ஜினீயர்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் கண்காணிக்கிறார்கள். வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வி.வி.பாட் எந்திரங்களும் இணைக்கப்பட்டு சரி பார்க்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 தொகுதியில் 10,443 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது.
ஆர்.கே. நகர், பெரம்பூர், கொளத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிகமாக இருப்பதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி.பாட் எந்திரங்கள் சோதனை செய்யப்படுகிறது.
மாதிரி வாக்குப்பதிவு செய்து எந்திரங்களை பரிசோதனை செய்வது வழக்கம். அந்தப் பணியும் தொடர்ந்து நடைபெறும். வாக்குப்பதிவுக்குரிய பட்டனை அழுத்தினால் யாருக்கு வாக்களித்தோமோ அவருக்கு அந்த வாக்கு செல்கிறதா என்பதை சோதனை செய்வார்கள். இந்த பணி முடிந்தவுடன் அனைத்து எந்திரங்களும் மீண்டும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று காலை முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.