தமிழக செய்திகள்

டெல்லி, மும்பையை விட சென்னையில் அதிகம்: சமையல் பொருட்கள் விலை உயர்வால் குடும்பம் நடத்த திணறும் பெண்கள்

கடந்த ஓராண்டில் சென்னையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

சென்னையில் சமையல் பொருட்களின் விலை டெல்லி, மும்பையை விட அதிகமாக உயர்ந்துள்ளது. அரிசி, கோதுமை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சாமானிய மக்களின் வாழ்க்கையை சிரமமாக்கி, இல்லத்தரசிகளை நிதிச்சுமையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வானது தற்போது சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களை திணற வைக்கிறது. குறிப்பாக அன்றாட சமையல் பொருட்களுக்கு ஆகும் செலவுகள் இல்லத்தரசிகள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பெரும் அச்சத்தை விதைத்துள்ளது.

விலைவாசி உயர்வு

காலையில் கண் விழித்ததுமே காலியாக கிடைக்கும் அஞ்சறைப்பெட்டியையும், காய்கறி பையையும் பார்த்து மலைத்து நிற்கும் சாமானிய மக்களின் வேதனையை அதிகரிக்கும் வகையில், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன. இதனால் குடும்பம் நடத்த பெண்கள் திணறுகிறார்கள்.

சென்னையில் வசிப்பவர்களுக்கு அன்றாட சமையல் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவது நாளுக்கு நாள் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி வருகிறது. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் விலைகள் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் அதிகம்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, சென்னையில் ஒரு கிலோ அரிசி ரூ.80-க்கு விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.22 அதிகம். அதே வேளையில் டெல்லியில் அரிசி கிலோ ரூ.47, மும்பையில் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் கோதுமையின் விலை சென்னையில் ரூ.47 ஆக உள்ள நிலையில் டெல்லியில் ரூ.34 ஆகவும், மும்பையில் ரூ.44 ஆகவும் உள்ளது.

அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் சென்னையில் மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.58-க்கு விற்கப்படுகிறது. இது டெல்லி மற்றும் மும்பை விலையை விட 2 மடங்கு அதிகம். கொல்கத்தாவின் விலையோடு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம் ஆகும். தக்காளி விலை மும்பையை விட 2 மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை மும்பை மற்றும் டெல்லியை விட கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.18 வரை கூடுதலாக உள்ளது.

கடந்த ஓராண்டில் சென்னையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இருப்பினும், இந்த 4 பொருட்களின் விலை டெல்லி மற்றும் மும்பையை விட சென்னையில் சற்று குறைவாகவே உள்ளது.

இணையதள வணிகம் மற்றும் பெரிய அங்காடி கடைகளில் சில பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உள்ளன. சில இணைய தளங்களில் பச்சரிசி ஒரு கிலோ ரூ.110 வரையிலும், கோதுமை ரூ.100 வரையிலும் விற்கப்படுகிறது. கடலை எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.250-ஐ தொட்டது.

சில்லறை கடைகளில் சில பொருட்கள் ஆன்லைன் விலையை விட ரூ.10 முதல் ரூ.25 வரை குறைவாக இருந்தாலும், பெரும்பாலானவை அரசு குறிப்பிட்ட சராசரியை விட அதிகமாகவே உள்ளன. குறிப்பாக வெங்காயம் கிலோ ரூ.80 வரையிலும், தக்காளி ரூ.60 வரையிலும், உருளைக்கி ழங்கு ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

காரணங்கள்

இந்த திடீர் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. உயர்தர அரிசி வகைகளுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அங்கு உற்பத்தி குறைந்ததால் வரத்து பாதிக்கப்பட்டு அரிசி விலை உயர்ந்துள்ளது. மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், வரும் மாதங்களில் நீர்ப்பாசனத்திற்கு தட்டுப்பாடு வரலாம் என்ற அச்சமும் உள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை தள்ளிபோட்டுள்ளனர். டிசம்பர் மாத மழை பொழிவை மட்டுமே நம்பி உள்ளனர். ஜனவரியில் தண்ணீர் கிடைப்பது சந்தேகமாக இருப்பதால், விளைச்சல் குறைந்து மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சவால்கள்

தொழிலாளர் கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:-

பொருட்களின் வரத்து குறைந்துள்ள சூழலில், தொழிலாளர்களை பணியமர்த்துவதும் தக்க வைப்பதும் பெரும் சவாலாக உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.800 முதல் ரூ.1,500 வரை கூலி கொடுத்தாலும், உணவு மற்றும் தங்குமிடம் வழங்கினாலும் ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. இதனுடன் எரிபொருள் மற்றும் சுங்கச்சாவடி கட்டணங்களும் சேர்ந்து வியாபாரத்தை பெரிதும் பாதிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிக லாபம்

ஆனால், இந்த விளக்கங்களை நுகர்வோர் ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். சில்லறை வியாபாரிகளின் அதிகப்படியான லாப நோக்கமே விலை உயர்வுக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நுகர்வோர் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்படும் வெங்காயம், வெளிச்சந்தையில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுவது எந்த விதத்தில் நியாயம். மேல்நிலை செலவுகளை காரணம் காட்டி வாடிக்கையாளர்களிடம் அதிக லாபம் ஈட்டுவது அப்பட்டமான பேராசை’ என்றார்.

SCROLL FOR NEXT