தமிழக செய்திகள்

திரு.வி.க. நகரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் மறியல்

பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை- மணியம்மை நகர் சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை திரு.வி.க. நகர் அடுத்த மணியம்மை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சரிவர குடிநீர் வரவில்லை. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

போக்குவரத்து நெரிசல்

இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி கடும் சிரமம்அடைந்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை- மணியம்மை நகர் சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினை

தகவல் அறிந்ததும் திரு.வி.க. நகர் போலீசார் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT