தமிழக செய்திகள்

தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது காவலாளியை அடித்து, சட்டையைக் கிழித்த இளம்பெண்!

சிசிடிவி மூலம் கார் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட மோதலில் முதிய காவலாளியை இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, சட்டையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

கார் பார்க்கிங்கில் வெடித்த வாக்குவாதம்

மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திரையரங்கில் தற்போது “ஜனநாயகன்” திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் காரில் ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க வந்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த முதிய காவலாளி ஸ்ரீதர், காரை பார்க்கிங் பகுதியில் சரியாக நிறுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இதில் காவலாளிக்கும் காரில் வந்த குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

முதியோரை கண்ணத்தில் அறைந்த இளம்பெண்

இந்த நிலையில் படம் முடிந்து அந்த குடும்பத்தினர் காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அதே நேரத்தில் மற்றொரு காட்சிக்கு ஒரு கார் உள்ளே வந்தது.

அதனால் வெளியே செல்லும் காரை நிறுத்திவிட்டு, உள்ளே வந்த காரை அனுமதித்த காவலாளி ஸ்ரீதர், பின்னர் அவர்களை வெளியே செல்லும்படி கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த இளம்பெண் ஒருவர் கீழே இறங்கி வந்து, வயதான காவலாளி ஸ்ரீதரின் சட்டையை பிடித்து கிழித்ததுடன், கன்னத்தில் தாக்கினார். இதில் காவலாளியின் சட்டை கிழிந்ததுள்ளது.

தியேட்டருக்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்சியடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் தலையிட்டு அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு சென்றார்.

போலீசார் அதிரடி விசாரணை

இந்த சம்பவத்தை அங்கு வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ வைரலானதை அடுத்து தாம்பரம் போலீசார், பாதிக்கப்பட்ட காவலாளி ஸ்ரீதரிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தியேட்டரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.