தமிழக செய்திகள்

ரூ.500 டம்மி நோட்டை கொடுத்து ஏமாற்றிய பெண்: திருவொற்றியூர் மூதாட்டிக்கு உதவிகள் குவிகிறது

வாலிபர் பணம் கொடுத்து உதவும் போது தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் மூதாட்டி கூறியுள்ளார். இது அவர் மீதான பரிதாபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் மூதாட்டி ஒருவரிடம் பெண் ஒருவர் பழம் வாங்கியுள்ளார். பின்னர் அவர் மளிகை கடைகளில் விற்பனை செய்யும் சிறுவர்கள் விளையாடும் டம்மி 500 ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றி விட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த டம்மி ரூபாய் நோட்டை காட்டியபடி மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தேடிச் சென்று பலரும் உதவி செய்து வருகிறார்கள். வாலிபர் ஒருவர் மூதாட்டியை சென்று பார்த்து 1 கிலோ மாம்பழம் வாங்கியுள்ளார். 1 கிலோ மாம்பழம் 150 ரூபாய் என்று மூதாட்டி கூறும் நிலையில் அந்த வாலிபர் நேற்று என்ன நடந்தது? என்று விசாரித்துள்ளார். அப்போது மூதாட்டி கள்ள நோட்டை கொடுத்து விட்டு போய்ட்டாங்கய்யா.. என்று அப்பாவி தனமாக கூறுகிறார். இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மூதாட்டியிடம் ரூ.3 ஆயிரத்தை கையில் கொடுத்து விட்டு இதனை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதுடன் உஷாராக இருக்கவும் அறிவுறுத்துகிறார்.

மூதாட்டியை சென்று பார்த்த நடிகர் KPY பாலா, நீங்கள் ஒரு 500 ரூபாய் நோட்டு தான் ஏமாந்தீர்கள்.... இந்த கவர் முழுவதும் 500 ரூபாய் நோட்டுகள் இருக்கு. இது எல்லாம் உங்களுக்குத்தான் என்று மூதாட்டியிடம் தருகிறார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் பலரும் மூதாட்டிக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். வாலிபர் பணம் கொடுத்து உதவும் போது தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் மூதாட்டி கூறியுள்ளார். இது அவர் மீதான பரிதாபத்தை மேலும் அதிகரித்துள்ளது.