தமிழக செய்திகள்

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

வலது காலில் குண்டு பாய்ந்த பிரகாசும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி உயிரிழந்ததையடுத்து குற்றவாளி பிரகாஷ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி அடுத்த உப்பரபாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத். கிரேன் ஆபரேட்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 34). இவர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவின் கணினி பிரிவில் கடந்த 6 மாதங்களாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த மாதம் 21-ந்தேதி மாலை ராஜேஸ்வரி பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியை சேர்ந்த கார் டிரைவரான பிரகாஷ்(38) என்பவர் திடீரென ராஜேஸ்வரியிடம் வாக்குவாதம் செய்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மறுநாள் (22-ந்தேதி) மாதவரம் அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள மயானப் பகுதியில் பதுங்கி இருந்த பிரகாசை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

இதில் வலது காலில் குண்டு பாய்ந்த பிரகாசும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ராஜேஸ்வரி தனது பேஸ்புக் பக்கத்தில் அதிகமாக ரீல்ஸ் பதிவிட்டு வந்தார். சமூகவலைதளத்தில் அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து அவரது வீடியோவை ரசித்தனர். இதற்கிடையே ராஜேஸ்வரிக்கு பிரகாசுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

பின்னர் அவர் பிரகாசுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் பிரகாஷ், ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி 2 வாரத்திற்கு பின்னர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து குற்றவாளி பிரகாஷ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஓரளவு உடல் நலம் தேறி இருந்த ராஜேஸ்வரியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றி உள்ளனர். இந்த நிலையில் அவர் இறந்து போன சம்பவம் உறவினர்களை சோகம் அடைய செய்து உள்ளது.

SCROLL FOR NEXT