தமிழக செய்திகள்

ரெயிலில் கொலை செய்யப்பட்ட பெண்.. பாம்பு மோதிரம் மூலம் 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

கன்னியாகுமரியில் ரெயில்வே நிலையத்தில் பயன்படுத்தப்படாத பெட்டி ஒன்றினுள் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவ இடத்தில் கிடைத்த பாம்பு மோதிரம் ஒன்றை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நவம்பர் 13 அன்று ரெயில்வே நிலையத்தில் பயன்படுத்தப்படாத பெட்டி ஒன்றினுள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத 54 வயது பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

இந்த குற்ற சம்வம் நிகழ்ந்த நள்ளிரவு நேரத்தில், ரெயில் பெட்டியை சுத்தம் செய்வதற்காக ரெயில்வே ஊழியர் ஒருவர் உள்ளே சென்றபோது, இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசாருக்கு, அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அப்போது குற்றசம்வம் நிகழ்ந்த இடத்தில் பாம்பு உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து மோதிரத்தில் இருந்த ஹால்மார்க் முத்திரை விவரங்களை வைத்து, அது குஜராத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து குஜராத்தில் உள்ள விற்பனையாளர்கள் மூலம், அந்த மோதிரம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு சில்லறை விற்பனையாளருக்கு வழங்கப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மோதிரத்தை வாங்கும் போது வழங்கப்பட்ட பான் எண் விவரங்களை வைத்து மத்தியப் பிரதேச முகவரியை போலீசார் கண்டறிந்தனர்.

இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள முகவரியை காவல்துறையினர் அணுகிய போது, அந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக தனது சொந்த ஊரில் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்தபோது, அங்கு பிச்சை எடுத்து கொண்டிருந்த நபர் ஒருவர், அந்த குறிப்பிட்ட பெட்டியில் இருந்து வெளியே வருவதை போலீசார் கண்டறிந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சம்பவத்தன்று அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையியையும் போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து கொடிருப்பதாகவும், பெண்ணின் உடல் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT