கொலை 
தமிழக செய்திகள்

பெரியபாளையம் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி பெண் கொடூர கொலை

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது.

கொலையுண்ட அருணாவின் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது ஒரு மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்கள்.

பெரியபாளையம் அருகே உள்ள தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் அருகில் உள்ள வயல்வெளி அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஆந்திரா பெண்

இதில் கொலையுண்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே உள்ள நின்ரை, சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா(40) என்பது தெரிந்தது. அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது. அவர் அணிந்து இருந்த தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலையுண்ட அருணாவின் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது ஒரு மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்கள். அருணா உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாய் வீட்டிற்கு வந்தபோது கொலை செய்யப்பட்டு உள்ளார். அணிந்து இருந்த நகைகள் அப்படியே உள்ள நிலையில் அருணா கொலை செய்யப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதேபோல் கடம்பத்தூர் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய தகராறில் வாலிபர் கொல்லப்பட்டார்.

தற்போது ஊத்துக்கோட்டை அருகே பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சத்தை கொள்ளையர்கள் அள்ளி சென்று உள்ளனர்.