போலீசார் விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீசை கைது செய்தனர்.
தூத்துக்குடி கந்தன் காலனி 3-வது தெரு மேற்கு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது மனைவி சசிகலா (வயது47). இவர்களுக்கு நிரஞ்சன்குமார் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சித்திரைவேல் கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மகன் நிரஞ்சன் குமாருக்கு திருமணமாகி சங்கர் காலனியில் தனியாக வசித்து வருகிறார். மகள் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டின் மாடியில் சசிகலா மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சசிகலா அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், துணை சூப்பிரண்டு குரு வெங்கட்ராஜ் மற்றும் தென்பாகம் போலீசார் விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீசை (27) கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறும்போது, மது குடிப்பதற்காக அவ்வப்போது எனது பெரியம்மாவிடம் பணம் கேட்பேன். அதே போன்று நேற்று காலையில் பெரியம்மாவிடம் பணம் வாங்கி சென்றேன். பின்னர் பிற்பகலில் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றேன்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து என்னை திட்டியதால் ஆத்திரத்தில் பெரியம்மா சசிகலாவை வெட்டி கொலை செய்துவிட்டு பின்னர், கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்று அதன் மூலம் மது குடிக்க நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை கைது விட்டனர் என்றார்.