தமிழக செய்திகள்

திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்: போதை ஊசி செலுத்தி காதலனுடன் உல்லாசமாக இருந்த காதலி மரணம்

கைதான சதாம் உசேனுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் எப்படி கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

திருச்சியில் தனியார் ஓட்டலில் தங்கி போதை ஊசி செலுத்தி காதலனுடன் உல்லாசமாக இருந்த காதலி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காதல்

திருச்சி அரியமங்கலம் மலையடிவாரம் தீப்பெட்டி கம்பெனிகாரத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஆசாத். இவரது மகள் யாஸ்மின் (வயது 18). கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவர் அரியமங்கலம் உக்கடை எம்.ஆர். மில் தெருவை சேர்ந்த ஜாகீர்உசேன் மகன் சதாம் உசேன் (19) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களுக்கு சென்றுள்ளனர். திருச்சி சந்திப்பு ரவுண்டானா அருகில் உள்ள ஓட்டலில் கணவன்-மனைவி என கூறி அறை எடுத்து தங்கினார்கள்.

உயிரிழப்பு

நேற்று மாலை 5 மணி அளவில் யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனே சதாம்உசேன் தனது நண்பர் ஷேக் அப்துல்லா(19) என்பவரது உதவியுடன் யாஸ்மினை திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

யாஸ்மினின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் யாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காதலன்-நண்பர் கைது

இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சதாம் உசேன் தனது காதலிக்கு போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தி உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.

அதிக போதை

அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு யாஸ்மின் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடத்தல் மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் சதாம் உசேன் மற்றும் அவருக்கு உதவிய அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய 2பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய போதை மாத்திரைகள், ஊசிகளை லாட்ஜில் இருந்து பறிமுதல் செய்தனர்.

உயிரிழந்த யாஸ்மினுக்கும், சதாம் உசேனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மைனராக இருக்கும்போதே காதலன் சதாம் உசேன், யாஸ்மினுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

போக்சோ வழக்கு

இது பற்றி அவரது தாயார் ஷகிலா பேகம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், சதாம் உசேனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பின்னர் காதலன் பிடியில் இருந்து மீட்கப்பட்ட யாஸ்மினை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைகளில்

ஜெயிலில் இருந்து வந்த பின்னர் மீண்டும் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. போதை ஊசியால் உயிரிழந்த யாஸ்மின் மற்றும் அவரது காதலன் சதாம் உசேன் ஆகிய 2 பேருக்கும் போதை ஊசியை செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. கைகளில் ஆங்காங்கே ஊசி செலுத்தி கொண்டதற்கான அடையாளங்கள் கைகளில் உள்ளன.

தாய்

கைதான சதாம் உசேனுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் எப்படி கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

தாய்க்கு தெரியாமல் யாஸ்மின் போதை மாத்திரைகளை எடுத்துக் கொண்டு காதலனுடன் திருச்சி தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கியதுடன், அங்கு இருவரும் போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே போதைப்பொருட்கள் சப்ளை செய்யும் யாஸ்மினின் தாயார் ஷகிலாபேகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர் யார் யாருக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்துள்ளார், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.