தமிழக செய்திகள்

போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் பலி

இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

125 நாள் வேலை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்மணிக்கும், ஊராட்சி செயலாளருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுள்ளதாக தெரிகிறது.

பண்ருட்டி அருகே உள்ள ஒறையூரை சேர்ந்தவர் லட்சாதிபதி. இவரது மனைவி கண்மணி (வயது28).

பணிதள பொறுப்பாளர்

இவர் ஒறையூர் ஊராட்சியில் வி.பி.ஜி.ராம் ஜி திட்டத்தின் கீழ் நடந்து வரும் 125 நாள் வேலை திட்ட பணியில் பணிதள பொறுப்பாளராக இருந்து வந்தார். அதே ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக அருள் என்பவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் 125 நாள் வேலை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்மணிக்கும், ஊராட்சி செயலாளருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக இருதரப்பினரும் புதுப்பேட்டை போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர்.

தீக்குளிப்பு

இதையடுத்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அதன்படி கடந்த 13-ந் தேதி கண்மணியின் கணவர் லட்சாதிபதியை புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுபற்றி அறிந்த கண்மணியும் உடனே போலீஸ் நிலையம் வந்தார். அவர், போலீசாரிடம் எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. அவரை விடுவிக்க வேண்டும் என கூறினார். மேலும் போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் நுழைந்து அவர் தான் ஏற்கனவே கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்குள் ஓடினார்.

போலீசார்

உடனடியாக போலீசார் தீயை அணைத்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் 80 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

போராட்டம்

இந்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 நாட்களாக அவரது உறவினர்கள், வி.சி.க.வினர் போராட்டம் நடத்தினர்.

போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஊராட்சி செயலாளர் அருளை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

உயிரிழப்பு

இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கண்மணி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுப்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் ஒறையூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT