தமிழக செய்திகள்

தலைமை செயலக நுழைவு வாயிலில் பெண் தீக்குளிக்க முயற்சி

தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலில் காத்திருந்த பொதுமக்களை அங்கிருந்த காவலர்கள் ஒழுங்குபடுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.

சென்னை தலைமை செயலக நுழைவு வாயிலில் பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை செயலகம்

சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தங்களின் மனுக்களை அளிப்பது வழக்கமாக உள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று தலைமை செயலகத்தில் ஏராளமான பொதுமக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க குவிந்தனர்.

முதலமைச்சர் தனிப்பிரிவு

பட்டா பிரச்சனை, பத்திரப்பதிவு, நில அபகரிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான மனுக்களுடன் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர். தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலில் காத்திருந்த பொதுமக்களை அங்கிருந்த காவலர்கள் ஒழுங்குபடுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.

தனிப்பிரிவில் மனு கொடுக்க ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் அமைச்சர்களை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் தலைமை செயலகம் வந்திருந்தனர். அவர்களிடம் எந்த அமைச்சரை பார்க்க வேண்டும்? உங்களை வர சொல்லி இருக்கிறார்களா என்று விசாரித்து அவர்களையும் உள்ளே அனுமதித்தார்கள்.

வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் தலைமை செயலக நுழைவுவாயிலில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

பெண் தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் திண்டிவனத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண், தலைமை செயலக நுழைவுவாயில் அருகே திடீரென தீக்குளிக்க முயன்றார். அவர் தனது தலையில் டீசலை ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார். ஆனால் அதற்குள் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து ஜீப்பில் ஏற்றி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது ஏற்கனவே முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

SCROLL FOR NEXT