சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் குமரன், இவரது மனைவி கண்ணகி (45), இவர் சேலம் அஸ்தம்பட்டியில் பெஸ்ட் எம்பவர்மெண்ட் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரஸ்ட் நிர்வாகிகளுடன் இணைந்து கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.
அப்போது உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் ரூ.1 லட்சத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டால் 1000 ரூபாய் கமிஷன் தருவதாகவும், அதற்கு உங்களது ஆதார் கார்டை தர வேண்டும் என்றும் கூறினர். கமிஷனுக்கு ஆசைப்பட்ட மாணவர்கள் சிலர் தங்களது ஆதார் கார்டுகளை அவர்களிடம் கொடுத்தனர். பின்னர் மாணவர்கள் வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை மாற்றி விட்ட நிலையில் அவர்களுக்கு 1000 ரூபாயை கமிஷனாக வழங்கி உள்ளனர். இந்த நிலையில் தனியார் வங்கியில் இருந்து ஆதார் கார்டில் உள்ள முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கறவை மாடு வாங்க பெறப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் விவசாய கடனுக்கான தவணை தொகையை உடனே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பெயரில் கடன் வாங்கி விட்டு ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக நேற்று முன்தினம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இது குறித்து மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சரண்யா தேவி விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆதார் கார்டுகளை பெற்று மாணவர்கள் பெயரில் கறவை மாடு கடனை பெற்று மாணவர்களுக்கு 1000 ரூபாய் கமிஷன் கொடுத்து விட்டு அந்த பணத்தை அவர்களுக்கு வேண்டிய வங்கி கண்க்கில் மாற்றி கண்ணகி இந்த மெகா மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன்படி சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.70 கோடிக்கும் மேல் மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து டிரஸ்ட் நிர்வாகி கண்ணகி, அவரது கூட்டாளி முத்துக்குமரன் (36) ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து கண்ணகியிடம் மோசடி பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார், சொத்து வாங்கி குவித்தாரா, அல்லது வேறு யாரிடமும் பணத்தை கொடுத்து வைத்துள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த மோசடி சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய 8 பேரை போலீசார் தேடினர். அவர்கள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை உதவி கமிஷனர் சரண்யா தேவி தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.