தமிழக செய்திகள்

"மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்"- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.

மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.