பெரியபாளையத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பவானி அம்மன் கோவில் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள், மாணவர்கள் போக்குவரத்துக்காக பஸ்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. மேலும், எல்லாபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளிட்டவை உள்ளன.
இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பெரியபாளையம் பகுதிக்கு பொதுமக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இவர்களுக்கு அரசு பஸ்கள் போக்குவரத்திற்கு முக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில் பெரியபாளையத்தில் இருந்து மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூருக்கும், பெரிய பாளையத்தில் இருந்து பூந்தமல்லிக்கும், பெரியபாளையத்தில் இருந்து சென்னை தி.நகருக்கும், பொன்னேரியில் இருந்து பெரியபாளையம் வழியாக திருவள்ளூர், காஞ்சிபுரம் வரையில் இயக்கப்பட்ட பஸ்கள் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பெரியபாளையத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவள்ளூரில் இருந்து மெய்யூர் வழியாக மேல்செம்பேடு வரையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்பட்ட பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.