தமிழக செய்திகள்

மாமல்லபுரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா?- சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

மாமல்லபுரத்தில் கடற்கரைகோவில், வெண்ணை உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், புலிக்குகை ஆகியவை புராதன சின்னங்களாக உள்ளன.

மாமல்லபுரத்தை யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்து உள்ளது. இதனால் நாள் தோறும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் மாமல்லபுரம் சுற்றுலா வந்து புராதன சின்னங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

வார விடுமுறை நாட்கள், பண்டிகைக் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை பலமடங்கு அதிகரிக்கும். ஆனால் மாமல்லபுரத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

பெருகிவரும் மக்கள் தொகை, வாகனப் பயன்பாடு, மாறிவரும் சூழ்நிலையில் போக்குவரத்து நெரிசலை போக்க கடந்த

2024-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி கருக்காத்தமன் ஆலயத்தின் அருகில் இரட்டை குளம் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.90 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் தற்போது முடங்கி உள்ளது.

மாமல்லபுரம்

இதேபோல் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்காக ரூ.29 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த திட்டமும் கிடப்பில் உள்ளதாக தெரிகிறது. எனவே பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுதொடர்பாக திராவிட வெற்றிக் கழகம் தலைவர் மல்லை சத்யா வெளியிட்டு உள்ள அறிக்கையில், மாமல்லபுரத்திற்கு புதிய திட்டங்களை கொண்டு வராவிட்டாலும் கடந்த அரசு அறிவித்த திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யாமல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி உலகப் பாரம்பரியச் சின்னமாகத் திகழும் சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT