சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக அகற்றப்பட்ட தடுப்புச் சுவர். 
தமிழக செய்திகள்

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பஞ்செட்டியில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சுற்று வட்டாரத்தில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர முடியாமல் தவிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பஞ்செட்டி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் 18 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாலையை கடக்க முடியாததால் உயிரிழப்புகள் அதிகரித்து, நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதார சேவைகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி நெடுவரம் பாக்கம், சென்னிவாக்கம், அகரம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சிறிய சுரங்க பாதை வழியாக 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இதேப் போன்று மறு பக்கத்தில் உள்ள நத்தம், பண்டி, காவனூர், தாங்கல், எர்ணவாக்கம், தர்மபுரி உள்ளிட்ட கிராம மக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்னை செங்குன்றம் வழி மார்க்கமாக செல்பவர்கள், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சிறு சுரங்கப்பாதை வழியாக சென்று மறுபக்கத்தில் பஸ் மற்றும் ஆட்டோகளில் பயணம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் மிகவும் பாதிப்பு

மேலும் பஞ்செட்டி பகுதியில் உயிரிழப்பு மரணம் ஏற்பட்டால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சுரங்கப் பாதை வழியாக அமரர் ஊர்தி கொண்டு செல்ல முடியாததால் அருகில் உள்ள அத்திப்பேடு கிராமம் தேசிய நெடுஞ்சாலையின் கீழ் பாலம் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று வருகின்றனர்.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இது குறித்து 18 முறை பஞ்செட்டி கிராமசபை கூட்டத்திலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சாலையை கடக்கும் போது இதுவரை 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்ததாகவும், நெடுஞ்சாலையில் நடுவே தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள கற்களை அவரவர் ஜே.சி.பி. எந்திரத்தை வைத்து அகற்றி இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று பின்னர் மூடி விடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சுற்று வட்டாரத்தில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர முடியாமல் தவிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறுகையில், கடந்த 18 வருடங்களுக்கு மேலாக சுரங்க பாதை அமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் மற்றும் கிராம சபை கூட்டத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வர வழி இல்லாமல் சுற்றி வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நீண்ட தூரம் சென்று வரும் நிலை உள்ளது. வரும் காலங்களில் யாராவது மரணம் அடைந்தால் பிணத்தை வைத்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டி வரும். இதனால் மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT