தமிழக செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 3 காட்டு யானைகள்- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

நெல்லி வளாகம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளின் அருகே உள்ள குளத்தில் 3 யானைகள் குளித்ததை விவசாயிகள் பார்த்தனர்.

யானைகள் வேறு பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்க குளத்தை சுற்றி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு நேரத்தில் யானைகளை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரப் படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை, அச்சன்புதூர் மற்றும் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தென்னந்தோப்புகள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது.

யானைகள்

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில், வடகரை டேம் ரோட்டில் உள்ள நெல்லி வளாகம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளின் அருகே உள்ள குளத்தில் 3 யானைகள் குளித்ததை விவசாயிகள் பார்த்தனர்.

கடையநல்லூர்

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் அச்சன் புதூர் போலீசார், பொதுமக்கள் யானைகள் நடமாடும் பகுதிக்குள் செல்லாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வனத்துறை

மேலும், மேக்கரை அணைச்சாலையில் போக்குவரத்துக்கும் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது. மாவட்ட வன உதவி அலுவலர் நெல்லை நாயகம் தலைமையில் கடையநல்லூர் வனச்சரகர் கனகராஜ், தலைமையில் காவல்துறை வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, யானைகள் வேறு பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்க குளத்தை சுற்றி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் யானைகளை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரப் படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT