தமிழக செய்திகள்

குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட காட்டு யானை - பொதுமக்கள் பீதி

கிராமங்களில் முதல்முறையாக யானை நடமாட்டம் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காட்டேரி, கோலனி, செல்வி நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த நிலையில் அந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டுயானை நள்ளிரவு நேரத்தில் புகுந்து தொடர்ந்து உலா வருகிறது. மேலும் அப்பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைபயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு காட்டுயானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களில் முதல்முறையாக யானை நடமாட்டம் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே குடியிருப்பு பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த காட்டுயானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.