தமிழக செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகளை தாக்கிய காட்டெருமை

வால்பாறையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

காட்டெருமைகள் தாக்கியதில் சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பரவலான மழையால் வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பசுமை மீண்டும் திரும்பி இதமான காலநிலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு வேன், கார்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று திரும்புகின்றனர்.

வால்பாறை சுற்றுலா

வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினரும், போலீசாரும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். இருந்தபோதிலும் வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தை உணராமல் தேயிலை எஸ்டேட் பகுதிகளுக்கு சென்று திரும்புவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில் வால்பாறையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தனர். பின்னர் அவர்கள் சின்னக்கல்லாறு அருவிக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர்.

காட்டெருமை தாக்கியது

அப்போது சின்கோனா 2-வது டிவிஷன் சாலையோரம் 2 காட்டெருமைகள் நின்று கொண்டு இருந்தன. அதில் ஒரு காட்டெருமை திடீரென ஆக்ரோஷத்துடன் சாலைக்கு வந்தது.

பின்னர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி தள்ளி தாக்கியது. இதனால் அவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தலைதெறிக்க தப்பி ஓடினர். அதன்பிறகு அந்த காட்டெருமைகள் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி சென்று விட்டன.

காயம்

தொடர்ந்து காட்டெருமை தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்னக்கல்லாறு சின்கோனா 2-வது டிவிஷன் ரோட்டில் காட்டெருமைகள் தாக்கியதில் சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT