தமிழக செய்திகள்

மனைவி, மகன், மருமகன் - தேர்தலில் களம்காணும் லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர்!

தமிழ்நாட்டில் தாயும், புதுச்சேரியில் மகனும் களம் காண்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் இன்று அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த லீமா ரோஸ் மார்ட்டினுக்கு லால்குடி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லீமா ரோஸின் மருமகனான ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். அங்கு அவருக்கு தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்தலில் அவர் தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது இந்த தகவல் உறுதி செய்யப்படும்.

மறுபுறம் லீமா ரோஸின் மகனான ஜோஸ் சார்லஸ், அவரைப்போல தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுகிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடந்தாண்டு புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இவரது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தர்பூசணி சின்னத்தில் காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் இவரது கட்சி போட்டியிடுகிறது.

இருமாநிலங்களில் ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவது மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.