தமிழக செய்திகள்

தென் மாவட்டங்களில் பரவலாக மழை- வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நேற்று மாலை முதலே தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக மக்கள் வெளியே செல்வதை குறைத்துக் கொண்டனர். குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

வெயிலின் தாக்கம் காரணமாக குடிநீர் வழங்கும் அணைகள், ஏரிகள் வற்றத் தொடங்கியதால் பொதுமக்களும் விவசாயிகளும் கவலையில் ஆழ்ந்தனர். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்றார் போல் ஆங்காங்கே திடீரென கருமேகங்கள் சூழ்வதும், அவ்வப்போது தூறல்கள் போடுவதுமாக இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை முதலே தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ராமநாதபுரத்தில் இன்று காலை திடீரென மேகங்கள் திரண்டு நகரம் முழுவதும் சூழ்ந்தன. ஆரம்பத்தில் தூறல் மழையாக தொடங்கிய மழை சில நிமிடங்களில் சற்று பலமாக பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல், பரமக்குடி பகுதியில் இன்று காலை பலத்த மழை பெய்தது. பஸ் நிலையம், உழவர் சந்தை, முத்தாலம்மன் கோவில் ஆகிய இடங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். இதே போல், பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், இன்றைய மழை காரணமாக நிலத்தில் ஈரப்பதம் உருவாகியுள்ளதால், கோடை விதைப்பு பணிகளை தொடங்கலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, கல்லல் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகாலையிலேயே மழை பெய்ததால் வேலைக்கு செல்வோர் சற்று சிரமத்துடன் குடைகளை பிடித்தவாறு தங்களது பணிகளுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போதைய மழை பொதுமக்களின் புழுக்கத்தை பெருமளவில் குறைத்தது. மழை காரணமாக இப்பகுதி விவசாயிகளும் கோடை உழவு உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மதுரை நகரில் இன்று காலை முதலே பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், எல்லீஸ் நகர், வசந்த நகர், மகபூப்பாளையம், காளவாசல், திருப்பரங் குன்றம், நரிமேடு, பீ.பீ.குளம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. திடீரென பெய்த மழை காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் சிரமத்தை சந்தித்தனர். எனினும் காலநிலை குளுமையாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை தொடங்கினர்.

இதே போல், விருதுநகரிலும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென இன்று காலை 7 மணி முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. மேலும், குளிர்ந்த சீதோஷண நிலையும் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.