தமிழக செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை

மாமல்லபுரத்தில் இன்று காலையில் இருந்தே பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம், தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து உள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த பாதை காரணமாக நேற்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது. இரவு சில இடங்களில் கன மழையாக கொட்டித் தீர்த்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, செங்குன்றம், ஆவடி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக பொன்னேரியில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)வருமாறு:- கும்மிடிப்பூண்டி-54, சோழவரம்-35, செங்குன்றம்-44, ஜமீன்கொரட்டூர்-8,பூந்தமல்லி-13.5, தாமரைப் பாக்கம்-51, ஆவடி-11.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம், தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிக பட்சமாக கேளம் பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவானது.

இதேபோல் திருப்போரூரில் 24 மி.மீட்டர், தாம்பரம்-20 மி.மீட்டர், வண்டலூர், மதுராந்தகம், செய்யூரில் தலா 15 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் இன்று காலையில் இருந்தே பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் காலை வேளையில் கடற்கரையில் நடைபயிற்சி செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் ரிசார்ட்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் தங்கியிருந்த விடுதி ரூம்களில் முடங்கினர். திறந்த வெளியில் வைத்து சிற்பங்கள் செதுக்கும் சிற்பக் கூடங்களில் சிலைகள் செதுக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT