தமிழக செய்திகள்

நீர் உரிமைகளை பாதுகாப்பதில் தவெக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

தமிழகத்திற்கான உரிமை நீரைப் பெற்றுத்தருவதில் எந்த அளவுக்கு அக்கறையுடன் செயல்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவி நீண்ட காலமாக காலியாக இருப்பது குறித்தும், அதனை நிரப்பத் தாமதம் ஆவது குறித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தவெகவின் மெத்தனப்போக்கு கண்டனத்திற்குரியது

காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு, தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும், உரிய நியமனத்தை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே, காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த பொறியாளர், கடந்த ஜூன் மாதமே தனது பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் அப்பதவிக்குத் தகுதியான நபரைத் தேர்வு செய்து நியமிக்க முடியாமல் இருப்பது, தவெக அரசின் நிர்வாகத் திறனை மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.

காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, பரம்பிக்குளம்–ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்களில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பெற்றுத்தருதல், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணித்தல், தொழில்நுட்பத் தரவுகளை ஆய்வு செய்தல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் பங்கேற்று தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வலுவான வாதங்களை முன்வைத்தல் எனப் பல்வேறு முக்கியப் பணிகளை மேற்கொள்வதில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவரின் பங்கு இன்றியமையாததாகும்.

காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியான நபரைத் தேர்வு செய்து நியமிப்பதிலேயே இத்தகைய மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கும் தவெக அரசு, தமிழகத்திற்கான உரிமை நீரைப் பெற்றுத்தருவதில் எந்த அளவுக்கு அக்கறையுடன் செயல்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நதிநீர் விவகாரங்களில் அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடனும், மாநிலத்தின் பாசனத் தேவைகளுடனும் நேரடியாகத் தொடர்புடைய சூழலில், காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவியை நிரப்பாமல் தொடர்ந்து காலியாக வைத்திருப்பது, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை தவெக அரசு உணர வேண்டும்.

நியமன விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

எனவே, தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல், காலதாமதமின்றி காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே அப்பதவிக்கான நியமனம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதன் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT