தமிழக செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறைக்கு பிராமண அமைச்சரை நியமித்தது சர்ச்சையாவது ஏன்?

ஸ்ரீரங்கம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் பல தசாப்த கால அரசியல் மரபுகளை உடைத்தெறிந்து, ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் என்றால், அது ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆனால் அவர்களின் தற்போதைய அமைச்சரவை நியமனம் என்பது குலத்தொழிலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. அதில் ஒன்றுதான் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் நியமனம் செய்யப்பட்டிருப்பது.

ஒரு கோயில் அரசு வசம் இருக்கும்போதே, அங்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை தற்போதுவரை ஆதிக்க சாதியினரே முடிவு செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு உதாரணமாக விழுப்புரம் மேல்பாதி கிராம த்ரௌபதி அம்மன் கோயில், சின்னதாராபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சம்பவங்கள் போன்றவை கூறப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ‘எம்மதமும் சம்மதம்’ என்ற சொலவடையை ஏற்றுக்கொள்ளும் மக்கள், எந்த சாதியும் சம்மதம்தான் என்பதை ஏற்றுக்கொள்வார்களா என்றால் இல்லை. அதற்கு இன்னும் நூற்றாண்டு காலங்கள் ஆகும். இதனால்தான் ஒரு பிராமணரை இந்து அறநிலையத்துறையில் நியமித்தது பேசுபொருளாகியுள்ளது.

ஒரு இந்துவை கோயில் நிர்வாகத்தில் நியமித்ததில் சிறுபான்மையினருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதே இந்துக்களுக்குதான் அது பிரச்னையாக வருமோ என பலரிடையும் அச்சம் எழுந்துள்ளது.

பொதுத்தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியது, சிறுபான்மையினர்களை அதிகம் நிறுத்தியது, தலித் அமைச்சர்கள் 7 பேர் நியமனம் என திமுக செய்யாததைக்கூட தவெக செய்திருந்தாலும், இந்த பிராமண நியமனத்தை சற்று யோசித்திருக்கலாம் என்றும் பலரும் கூறிவருகின்றனர்.

இருப்பினும், ஒருவர் பிறப்பால் பிராமணர் என்பதற்காக மட்டுமே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட தேவையில்லை. பிறப்பால் என்பதை தாண்டி, அவரின் செயல்பாடுகளை வைத்து அமைச்சர் ரமேஷை அணுகவேண்டும் எனவும் சில தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்த இருதரப்பு விமர்சனங்களையும், கருத்துகளையும், எண்ணங்களையும் உள்வாங்கிக் கொண்டு மாற்றம் என்றுக்கூறிய தமிழக வெற்றிக் கழகம், அதற்கேற்றவாறு செயல்பட்டு நல்லாட்சி தரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.