தமிழக செய்திகள்

சென்னை-புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்படுவது ஏன்?- 10 காரணங்களுடன் மின் வாரியம் விளக்கம்

துணை மின்நிலையங்களில் ஏற்படும் மின்தடை சம்பவங்கள் நேரடியாக கண்காணிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை முழுமையாக மறுத்து உள்ளனர்.

அவர்கள் கூறும்போது, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மின் வாரியத்தில் சரியாக பணி செய்யாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் எந்த பகுதியிலும் மின்வெட்டு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்று தெரிவித்தனர்.

மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அமைச்சர் நிர்மல்குமார் மின்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மின் தட்டுப்பாடு ஏற்படுவது ஏன் என்பது பற்றி மின் வாரியம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

போதுமான மின்சாரம்

தமிழ்நாட்டில் போதுமான அளவில் மின்சாரம் கிடைக்கிறது. அண்மைக் காலங்களில் மாநிலத்தின் உச்ச மின் தேவை தினசரி 20,000 மெகாவாட்டிற்குக் குறைவாகவே இருந்து வருகிறது. மின் உற்பத்தி, மின்பரிமாற்றம் மற்றும் மின்விநியோக அமைப்புகள் மாநில சுமை ஒழுங்குமுறை மையம், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் கள நிலை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 765 கி.வோ., 400 கி.வோ., 230 கி.வோ., 110 கி.வோ., 66 கி.வோ. மற்றும் 33 கி.வோ. நிலைகளில் மொத்தம் 1,910 துணை மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் 283 துணை மின்நிலையப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. சுமார் 39,763 சுற்று கி.மீ. உயர்மின் அழுத்த கோடுகள், 2,11,948 கி.மீ. உயரழுத்த மின் கோடுகள், 6,66,429 கி.மீ. தாழழுத்த மின் கோடுகள், 4.47 லட்சத்திற்கும் மேற்பட்ட விநியோக மின்மாற்றிகள் மற்றும் 8,312 ரிங் மெயின் யூனிட்ஸ் அமைப்புகள் மூலம் சுமார் 3.51 கோடி நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

சென்னை மண்டலத்தில்

சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 38.79 லட்சம் நுகர்வோருக்கு 253 துணை மின்நிலையங்கள், 40,798 விநியோக மின்மாற்றிகள், 16,582 கி.மீ. நிலத்தடி மின்கம்பிகள் மற்றும் 18,092 கி.மீ. மேல்நிலை மின் கம்பிகள் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

துணை மின்நிலையங்களில் ஏற்படும் மின்தடை சம்பவங்கள் நேரடியாக கண்காணிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான மின்தடைகள் ஏற்பட்டுவருகின்றன. அவற்றிற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:-

* அதிகபட்ச நேரங்களில் உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் பழுது ஏற்படுகிறது.

* நிலத்தடி மின்கம்பி பழுதுகள்

* ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பு

* விநியோக மின்மாற்றி பழுது அல்லது அதிக சுமை

* துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் டிரிப்பிங்

* மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமான மின்தடைகள்

* திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கான மின்விநியோக நிறுத்தம்

* மரக் கிளைகள் மின் கம்பிகளைத் தொடுதல் மற்றும் வெளிப்புற சேதங்கள்

* வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் உபகரண அழுத்தம்

* தனித்தனி பீடர் மற்றும் ஆர்.எம்.யூ. தொடர்பான கோளாறுகள் காரணங்களாக அமைந்துள்ளன.

பராமரிப்பு குழுக்கள்

இத்தகைய பிரச்சனைகளை விரைவாக சரிசெய்ய மொபைல் பராமரிப்பு குழுக்கள் மற்றும் எம்.ஆர்.டி. குழுக்கள் அனைத்து

மின் விநியோக வட்டங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

கூடுதலாக தற்காலிக களப்பணிக்குழுக்கள் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டு உள்ளன. மின்னகம், ஆன்லைன் சேவைகள் மற்றும் கள அலுவலகங்கள் மூலம் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு வருகின்றன.

மின்மாற்றிகள், மின்கம்பிகள், சுவிட்ச்கியர் உள்ளிட்ட தேவையான மின் உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. அதிக நுகர்வோர் சுமை மற்றும் நகர வளர்ச்சி காரணமாக மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படும் பகுதிகளில், உயர்திறன் மின்மாற்றிகள் அமைத்தல், புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்குதல், பீடர் பிரித்தல், நிலத்தடி மின்கம்பி வலுப்படுத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன.

மக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின்விநியோகத்தை வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.