தமிழக செய்திகள்

தேர்தல் பொறுப்புகளில் இருந்து திடீரென விலகியது ஏன்? வீடியோ வெளியிட்ட மாணிக்கம் தாகூர்!

தேர்தல் பொறுப்புகளில் இருந்து திடீரென விலகியது குறித்து எந்த விவாதமும் வேண்டாம் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார் எம்.பி. மாணிக்கம் தாகூர்.

காங்கிரஸில் நிலவும் உட்கட்சி மோதலால் அவர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த திடீர் விலகல் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“நேற்றில் இருந்து தேவையில்லாத குழப்பம் நிலவிவருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்னால் எந்த சிரமமும் ஏதும் வரக்கூடாது என்று நினைப்பவன் நான். தேர்தல் தொடர்பாக மாநில அளவிலான சில பொறுப்புகள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தப் பொறுப்புகளில் நான் தொடர விரும்பவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தெரிவித்துவிட்டேன்.

இது கடந்த 4 நாள்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ஒன்று. அதைப்பற்றிய விவாதங்கள் தற்போது தேவையில்லாதது. என்னை பொறுத்தவரை மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளில் என் பணியை ஆற்றுவேன்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி தோழர்களுடன் இணைந்து இந்த 6 தொகுதிகளில் வெற்றிப்பெற பணியாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்.