தேனி தேக்கம்பட்டி கிளைச்சிறையில் இருந்து அண்மையில் 17 சிறைக்கைதிகள் ஒன்றாக தப்பியது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறைத்துறையின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
தப்பிய 17 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து தப்பியிருந்த போது கைதி ஒருவர் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அக்.26ம் தேதியன்று கைதிகள் தப்பியநிலையில், அக்.28ம் தேதி மதியம் வரை 15 கைதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மற்ற இருவர் தேடப்பட்டு வந்தநிலையில், சகோதரர்களான திருப்பதியும், அவரது அண்ணன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூடலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இந்த மீனாட்சி சுந்தரம் சரண் அடைவதற்கு முன்பு பதிவு செய்த வீடியோதான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாங்கள் சேர்ந்து எல்லோரும் வெளியே வந்தது பிரச்சனை செய்வதற்காக அல்ல. உள்ளே உள்ள பிரச்சனைகளை நீதிபதியிடம் சொல்லிவிட்டு மீண்டும் சரணடைவதாகத்தான் இருந்தோம்.
சிறையில் இருக்கவே எங்களுக்கு பிடிக்கவில்லை. சிறையில் எங்களை நிறைய சித்திரவதைகள் செய்தார்கள். இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தப்பிய இரவும் நாங்கள் கோரிக்கையாக வைத்தோம். அராஜகம் செய்கிறீர்கள் என காவலர் திட்டிவிட்டு சென்றுவிட்டார். சூப்பிரண்டுவிடம் தெரிவித்தும், நீங்கள் என்ன பெரிய ஆளா? என எங்களை மட்டம் தட்டியே வைத்தார்கள்.
சிறையில் சாப்பாடு உள்ளிட்ட எதுவும் சரி இருக்காது. கைதிகள் இடம் கேட்டுப் பாருங்கள். அதைக் கேட்டதற்கு, சித்திரவதை செய்தார்கள். மனுவுடன் வருபவர்களையும் பார்க்கவிடமாட்டார்கள். கேட்டால், தண்டனை எனக் கூறுவார்கள். ஆனால், நாங்கள் சிறைக்குள் எந்த தவறும் செய்யவில்லை.
சிறையில் இருந்தால் என்னை எதாவது செய்துவிடுவார்கள் என்றுதான் நான் தப்பித்து வந்தேன். காவல்துறைக்கோ, பொதுமக்களுக்கோ நான் இடையூறாக இருக்கமாட்டேன்.
போலீசார் என்னை சுட்டுப்பிடிப்பதாக சொல்கிறார்கள். நான் இப்போதுதான் கல்யாணம் செய்து, எனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் வாழவேண்டும் என ஆசைப்பட்டு திருந்திதான் இருக்கிறேன்.
நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் தம்பியை முக்கிய குற்றவாளி எனக் கூறுகிறார்கள். இதற்கும், எனது தம்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நீதிபதிதான் எனக்கு உதவ வேண்டும். நான் செய்த தவறால் என் மனைவியும், எனது குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது. நான் தெரியாமல்தான் இந்த தவறை (சிறையில் இருந்து தப்பியது) செய்தேன்.
நாங்க கூட்டு சேர்ந்துதான் இந்த தவறை செய்தோம். அதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நாங்கள் இருவரும் மட்டும் மாட்டாமல் இருப்பதால், எல்லோரும் எங்கள்மீது மட்டும் பழி போடுகிறார்கள். சிசிடிவி சிறையில் உள்ளது. அதனை ஆய்வு செய்ய சொல்லுங்கள். அதில் தெரியும்.
நாங்கள் இருவரும் மட்டும் இன்னும் கைதாகவில்லை என்பதால், எங்களை மாட்டிவிட்டு, எங்கள் உயிரை பறிக்க பார்க்கிறார்கள். நான் வாழவேண்டும் என ஆசைப்படுகிறேன். என் தவறால், என் குழந்தையும், மனைவியும் பாதிக்கப்படக் கூடாது. என் தம்பி எந்த தவறும் செய்யவில்லை.” எனப் பேசியுள்ளார்.
தப்பியவர்களில் 5 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்களுக்கு ஜாமின் கிடையாது. கல்யாணசுந்தரம் மனைவிக்கு வளையகாப்பு நிகழ்ச்சி இருந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால்தான் கைதிகள் தப்பியதாக டி.எஸ்.பி விஷ்ணுபிரியா முன்னதாக தெரிவித்திருந்தார்.