தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் “ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை” நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜவகர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ஐ மீறாது என்றுக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்குமாறும் கடந்த 2017 செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைதொடர்ந்து, அந்த வழக்கு கடந்த 2017 டிசம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவ எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவோதயா பள்ளிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.
இங்கு ஏற்கனவே 38 அதிநவீன மாதிரிப் பள்ளிகள், உறைவிட வசதியுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 2024-2025 கல்வியாண்டில் மட்டும் இப்பள்ளிகளில் படித்த 1340 மாணவர்கள் அகில இந்தியக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாடு கல்வித் தரம் சிறப்பாக உள்ளது. ஜவகர் நவோதயா போன்ற புதிய பள்ளிகளைத் திறப்பதற்குப் பதிலாக, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 3,548.22 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றம், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக இடங்களை கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா, ஜவகர் நவோதயா பள்ளி விவகாரம் தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், அனைத்து மாநிலங்களிலும் ஜவகர் நவோதயா பள்ளிகள் உள்ளன, ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?
மத்திய அரசு பள்ளிகளை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது எனவே அவர்களின் நிலைப்பாடு என்ன ? உங்களிடம் பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை தானே கண்டறிய கூறுகிறோம், உடனடியாக நவோதயா பள்ளிகளை நிறுவுங்கள் என்றா கூறுகிறோம் ? எனக் தமிழக அரசு தரப்புக்கு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழக அரசு தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது, எனவே இது தொடர்பாக பதிலை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அரசின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விசயத்தில் நிலைப்பாட்டை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க முடியாது வேண்டுமெனில் 2 வார கால அவகாசம் வழங்குவதாக கூறினர். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், இரண்டு வார காலம் என்பது மிகவும் குறுகியது, உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதற்கு காலம் பிடிக்கும், எனவே குறைந்தபட்சம் மூன்று வார காலம் அவகாசம் அது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனைத்தொடர்ந்து வாதிட்ட எதிர்மனுதாரரான குமரி மகாசாபா தரப்பு வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ஏற்கனவே தமிழ்நாட்டில் 1500 சி.பி.எஸ்.இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டுகிறது.
ஏற்கனவே பல பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது, இந்தியும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை நிறுவ மறுக்கிறார்கள். இது தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வியை தடுக்கும் செயலாகும் என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி ஆர் .மகாதேவன், தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி பி.வி. நாகரத்னா, மூன்று மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது. வேறு எந்த மொழியையும் கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என கூறியபோது, குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, மும்மொழி கொள்கை என்பது இருக்கலாம் , ஆனால் அது 6ம் வகுப்பு முதலே தொடங்கப்பட வேண்டும். அதேவேளையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்குவது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். ஏனெனில் அந்த மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என தனது கருத்தை ஆழமாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு இடங்களை கண்டறிவது தொடர்பாக மூன்று வார காலத்திற்குள்ளாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கமாகப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு ஆணையிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.