தமிழக செய்திகள்

அரசு பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தது யார்? அவர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சிபிஎம் சண்முகம் கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன்மீது திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது.

இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யார் அவர் என்பதையும், ஏன் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம் எனவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.5 கோடி லஞ்சம் சர்ச்சையில் அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ‘தமிழ்நாடு நாள்’ விழா நேற்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்.,

"பெருமைமிகு இந்த மேடையில வச்சு மாண்புமிகு முதல்வரோடு எனக்கு வந்த சில அனுபவங்களைச் சொல்லப் போறேன். இதுவரைக்கும் நான் சொன்னதில்லை, ஊடக நண்பர்கள் வந்திருக்கீங்க.

தம்பி லயோலா மணிக்கு மட்டும் தெரியும். இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்க, அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி ரூபாய் நான் தர்றேன்' அப்படின்னு ஒருத்தர் பேசினார்.

சிரிச்சுகிட்டே லயோலா மணிகிட்ட நான் சொல்லி அனுப்பினேன்: 'தம்பி, 500 கோடி கொடுத்தாலும் யாருக்கும் பொருத்தமில்லாத ஒருத்தருக்கு ஒரு பதவி கூட தளபதி தரமாட்டார்.

நான் தளபதியின் தம்பி; பொருத்தமுள்ள புஷ்பவனம் குப்புசாமி அண்ணனுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய் வாங்காம அந்தப் பதவியை தளபதி தரச் சொல்லியிருக்காரு'ன்னு சொல்லி அனுப்புனேன். இன்னைக்கு வரைக்கும் நான் வெளில சொன்னதில்லை அண்ணே." எனக் கூறினார்.

அமைச்சர் ராஜ்மோகனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்தும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்காமல், அதனை மேடையில் பேசியது ஏன் என அமைச்சர் ராஜ்மோகன் மீதும், லஞ்சம் கொடுப்பவரை அழைத்து வந்த தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன்மீது திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT