தமிழக செய்திகள்

முதல்வர் ஆவார் என கணித்த ஜோதிடர் தற்போது விஜயின் ஆலோசகர்: யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்?

விஜய் முதல்வர் ஆவார் என கணித்த ஜோதிடர் தற்போது அவருடைய சிறப்பு பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறார். அவருக்கான தனிச் செயலாளர், சிறப்பு செயலாளர்களை நியமித்துள்ளார். இந்த நிலையில் இன்று முதலமைச்சரின் (அரசியல்) பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றி வேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான பணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இவர் ஒரு ஜோதிடர் ஆவார். த.வெ.க.-வின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தவர் எனக் கூறப்படுகிறது. விஜய் அரசியலில் குதித்தபோது, முதலமைச்சராக பதவி ஏற்பார். நீண்ட காலம் முதல்வராக பதவி வகிப்பார் என கணித்தார். மேலும், மாலை 3.15 மணிக்குப் பதிலாக காலை 10 மணிக்கு பதவி ஏற்றுக் கொண்டால் மங்களகரமாக இருக்கும் என்று விஜயிடம் கூறியதாக தெரிகிறது. இதனால்தான் பதவி ஏற்பு விழா காலை நேரத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவருடைய ஆலோசனைகளை விஜய் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

யார் இந்தி ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்?

வெற்றிவேல் ஈரோட்டில் பிறந்தவர். ஜோதிடராக பணியாற்றி வந்தார். வேத ஜோதிடம், தியானம் சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் எண் கணிதம் ஆகியவற்றில் அவருக்கு 40 வருடங்களுக்கு மேலான அனுபவம் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதாவின் ஜோதிட ஆலோசகராகவும் இருந்தார்.

ஜெயலலிதாவுடன் வெற்றிவேலுக்கு இருந்த தொழில்முறையான நட்பு

1991 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என வெற்றிவேல் கணித்தவர். மேலும், 1994 முதல் 1997 வரை கடுமையான சோதனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கணித்தவர். ஜெயலலிதா 1996-ல் முதல்வர் பதவியை இழந்தார். இந்த சம்பவங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவின் தனிப்பட்ட ஜோதிடர் ஆனார். ஆங்கிலத்தில் J jayalalitha என்பதை J Jayalalithaa என பெயரை மாற்றச் சொன்னவரும் இவர்தானாம்.

ஆனால் ஒரு முக்கியமான கணிப்பு தவறானதில் இருந்து ஜெயலலிதா உடனான தொடர்பில் கசப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெயிலுக்கு செல்ல மாட்டீர்கள் எனக் கணித்துள்ளார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. அவர் சிறைக்கு சென்றார். அதன்பிறகு அவரிடம் ஆலோசனை கேட்பதை ஜெயலலிதா நிறுத்திக் கொண்டார். இருவரிடையிலான தொழில்முறை நட்பு முறிவடைந்தது.

இதற்கிடையே 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தான் மும்பையில் பரவலாக அறியப்பட்டதாகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜகதீஷ் கபூர், GIC தலைவர் சென்குப்தா, IDBI தலைவர் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் கிரிஷ் கோகலே, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், நடிகை மனிஷா கொய்ராலா, தேயிலை வாரியத் தலைவர் ஷோம் சேகர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் மனைவி பாயல் அப்துல்லா ஆகியோர் உட்பட பல முக்கியப் பிரபலங்களுடன் தான் ஆலோசனை வழங்குவது தொடர்பாக பணியாற்றியதாகவும் அவர் கூறுகிறார்.

2008-ல் டெல்லிக்கு நகர்ந்துள்ளார். அப்போது தனது பண்டிட் வெற்றிவேல் பெயரை ராதன் பண்டிட் என மாற்றிக் கொண்டார். இந்தி தெரியாத போதிலும், ஆங்கிலத்தில் ஜோதிடம் ஆலோசனை வழங்கி வெற்றி கண்டுள்ளார். இதை அவரே கூறுகிறார். பாஜக மூத்த தலைவரான அத்வானியுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்து்ளளார். துபாய் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளதாக கூறுகிறார்.

டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு, வெற்றிவேல் விஜயின் அரசியல் வட்டாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2024-ல் வெளிப்படையா, தமிழக அரசியலில் விஜய் மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார் என கணித்தார். விஜய் V என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் விஜய் P, T எழுத்துகளில் தொடங்கும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

தேர்தல் காலகட்டத்தில், அவர் பல யூடியூப் நேர்காணல்களிலும் தோன்றினார். அவற்றில், விஜயும் அவரது கட்சியும் வலுவான அரசியல் எழுச்சியை பெறுவார்கள் என்று அவர் கணித்தார்.