தமிழக செய்திகள்

யார் தெருநாய்கள்? மக்களா, எதிர்க்கட்சிகளா? - ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு!

கடந்த ஒருமாத கால தவெக அரசின் ஆட்சி சிறப்பாக உள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் பிரவேசம் தொடர்பான யூகங்களுக்கு மத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,

“அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என மக்களிடம் கருத்துக்கேட்டு வீடியோ போட்டிருந்தேன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நீங்கள் வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

விரைவில் என் அம்மா மூலம், ரசிகர்களை வைத்து ஒரு நல்ல முடிவை தெரிவிப்பேன்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தவெக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது,

“என்னை பொறுத்தவரை கடந்த ஒருமாத காலமாக தவெக அரசின் ஆட்சி சிறப்பாகத்தான் உள்ளது. கோயில், பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடியது வரவேற்கத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை, அறநிலையத்துறை அமைச்சர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஒரு புது அரசு என்பதால் அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

நம்மையே உதாரணமாக கொண்டால், புது ஏரியாவிற்கு வாடகை வீட்டிற்கு சென்றால், வீடு வெளியிலிருந்து பார்க்க நன்றாக இருக்கும். வீட்டிற்குள் சென்றால்தான் அங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது தெரியும்.

அங்கிருக்கும் தெருநாய்கூட நம்மை பார்த்து குரைக்கும். அப்போது அதற்கு பிடித்த பிஸ்கட்டை போட வேண்டும். சில தெருநாய்கள் பிரியாணிதான் சாப்பிடும். அப்போது அதற்கு பிடித்த உணவை கொடுத்து அதை கத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வீடு, ஒரு நாய்க்கே இப்படி என்றால், ஒரு நாட்டை, மாநிலத்தை பார்ப்பவர்களுக்கு கால அவகாசம் வேண்டும். மாற்றம் வேண்டும் எனக் கேட்கிறீர்கள், அந்த மாற்றத்திற்கு நேரம் கொடுக்கவேண்டாமா? புது அரசுக்கு கால அவகாசம் கொடுக்கவேண்டும்.

எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைப்பது பொறாமையால்தான். தவெகவை விமர்சிப்பதற்கு முன்னால் நாம் என்ன செய்தோம் என்பதை யோசிக்கவேண்டும்.” என தெரிவித்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு தெருநாய்களை உதாரணமாக காட்டி பேசியதற்கு இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.