தமிழக செய்திகள்

வெளிநாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- காளியம்மாள் பேட்டி

த.வெ.க.வுக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் காளியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடக்கும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. வெறுமனே சினிமாவில் செய்வது போல ஆக்‌ஷன் காட்டுவதோ, ரீல்ஸ் பண்ணுவதோ ஆட்சியை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது. இதற்கு போதிய அனுபவம் தேவை.

முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு சென்று வெறும் 12,300 கோடி ரூபாய் மட்டுமே முதலீட்டை ஈர்த்துள்ளார். ஆனால் தொழில்துறை அமைச்சரோ இங்கேயே ரூ.1 லட்சம் கோடி ஈர்த்துள்ளதாகக் கூறுகிறார். வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மக்கள் ஏமாற்றம்

தி.மு.க.வும் நாங்களும் தான் போட்டியாளர்கள் என்ற கட்டமைப்பை நிறுவ த.வெ.க. நினைக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 1.30 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கம். சுறா படத்தில் மீனவர்களுக்காகப் பேசிய விஜய், இன்று நொச்சிக்குப்பம் மக்களை காலி செய்ய பார்க்கிறார். த.வெ.க.வுக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இடைத்தேர்தல்

பா.ம.க.வின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்கள் எங்களோடு வந்தால் பலம், வரவில்லை என்றாலும் அவர்களின் முடிவை ஏற்கிறோம். அ.தி.மு.க. மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT