தமிழக செய்திகள்

ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?- அதிகாரிகள் சொன்ன அப்டேட்

வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரெயில் சேவை தொடங்கினாலும், ஆதம்பாக்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பரங்கிமலை ரெயில் நிலையம் சென்று ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறக்கும் ரெயில் சேவை

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, வேளச்சேரி- பரங்கிமலை இடையிலான 5 கிலோ மீட்டர் தொலைவை இணைக்கும் வகையில் பறக்கும் ரெயில் வழித்தட திட்டப்பணி 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணியின்போது நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் பணிகள் முடங்கின. பின்னர், 2021-ம் ஆண்டுக்குப் பிறகு பணிகள் மீண்டும் தொடங்கின. கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த பணிகள், பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் பணிகள் முடிவடைந்தது.

சேவை தொடக்கம்

அதனைதொடர்ந்து, கடந்த மார்ச் 14-ந்தேதி வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கியது. இதனால் புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரெயில் சேவை தொடங்கினாலும், ஆதம்பாக்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பரங்கிமலை ரெயில் நிலையம் சென்று ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்பது பயணிகள் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் வளைவான பகுதியில் அமைந்துள்ளதால், ரெயில் பெட்டிகளுக்கும் நடைமேடைக்கும் இடையே பாதுகாப்பு வரம்புகளை மீறும் அளவுக்கு அதிக இடைவெளி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயில்கள் அங்கு நிற்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதை சரிசெய்யும் வகையில் என்ஜினீயரிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, ஆதம்பாக்கம் ரெயில் நிலையம் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றனர்.